மிச்சங்கள் சொச்சங்கள்
அச்சங்கள் ஆனபின்
உணர்ச்சியை ஏலம் கேளு
எந்தனை உந்தனை
எண்ணிடும் போதிலே
எத்திசை என்று கூறு
கற்பனை ஒப்பனை
ஒன்றுமே இல்லையேல்
விற்பனை செய்தா வாழ்வு
நிம்மதி நிற்கதி நிலையற்ற
சொல்மதி நிஜமற்ற ஒன்றெனில்
நின்மதி தேடி ஓடு
ஊனினை உயிரினை
தீயினில் இட்டபின்
சுவற்றினில் மாலை சூடு
சாவினை நாவினால்
ஏவிய நன்னெஞ்சே
சாவியை தூக்கிப் போடு
பேச்சினை நிறுத்தினால்
மூச்சினை இழப்பதாய்
நெஞ்சில் வண்ணக்கோடு
கற்பமாய்த் திகழ்ந்தது
சர்ப்ப தோசமாய் மாறிட
யார் இட்ட சாபக்கேடு
போலியும் வேலியாய்
பொறுப்புற்றிருந்ததைப்
பார்த்துமா இந்தக் கூற்று
கர்வத்தின் உச்சத்தில்
மனம் கைவீசி நடந்தது
கனவுடன் ஒத்துப்போச்சு
சங்கடம் தீர்த்திட சாய்ந்திட்ட
மார்பினை வெந்தணல் தின்றபின்
வெறும் சாம்பலை அள்ளிப்பூசு
கற்றதும் உற்றதும் இனி
கருவினில் இல்லையேல்
காறித்தான் உமிழ்ந்து செல்லு
நம்பிக்கை நாணயம்
நடிப்பினில் உண்டெனில்
நர்த்தனம் ஆடிக்கொல்லு
மொத்தமும் சொல்லமுன்
மூச்சுத்தான் அடைக்குதே
முன் ஜென்மம் என்ன ஆச்சு ?

No comments:
Post a Comment