Monday, 8 December 2014

மாற்றமும் மனநிலையும்


மாற்றம் ஒன்றே மாறாதது
மனதில் உள்ளது ஆறாதது
தேற்றம் பார்த்து நாட்டம்
கொண்டால் உண்மை அன்பு
பொய்யாகுது, பேச்சை மட்டும் ...
நோட்டம் போடு ஆட்டம் தீரும்
சாயல் தூவும், கேட்டுக் கேட்டு
தோற்றுப் போன கேள்விக்குறியின்
அவலக்கதையின் துயரம் கேளு
போற்றிப் பாடும் இதயம் உன்னை
கூட்டித் தள்ளும் நிலையைப் பாரு
நிலமை கண்டு நெஞ்சில் தொட்டு
எல்லாம் நன்மைக்கே என்று கூறு !
 

சட்டை போட்ட சட்டத்தரணி


கட்டம் போட்ட சட்டை போட்ட எட்டூரு
நாட்டாமை பட்டம் சூட்டும் விழாவில்
சட்டம் ஒகன்றை பிறப்பித்தாரம்...
குட்டை பாவாடை அணிந்து முட்டுக்காலில்
நின்று தொட்டு கும்பிட வேண்டும், இல்லை...
திட்டம் போட்ட என்னை தட்டி கிழேவிழுத்தி
கட்டித் தழுவி என் மொட்டைத் தலையிலே
முட்டை உடைத்திட வேண்டும் .
இதை மட்டம் தட்டி எவர் பேசினாலும் அவர்கள்
கொட்டம் அடக்கப்பட வேண்டும்,
ஆஹா ஆஹா என்ன திட்டம் என்ன திட்டம் ...!!!
 

ஆஞ்சானில் ஊஞ்சல் ஆட்டம்


ஆஞ்சான் கயிற்றில் ஊஞ்சல் கட்டி
ஆடும் உனக்கு,.... தளத்தில் நின்று
தாவான் கயிற்றை பற்றிப் பிடிக்கும்
சிறுபிள்ளையின் தவிப்பு எப்படி புரியும்,
கொக்கான் வெட்டிலே குரங்குப் பாய்ச்சல்...
ஆடிவிட்டு பிட்டுக்குழலாட்டம் நானோ
கைவிரல்களைப் பற்றி ஒன்றொன்றாய்
சேர்க்கின்றேன், ..நீயோ அரக்கல் என்று
சொல்லி அதாப்பி விளையாடுகின்றாய்,
வழிதெரியா விழியோரம் கண்ணீரும்
கசிந்தோட கருணை என்ற பெயரினிலே
குங்கிலியத்தை உருக்கி என் கண்களிலே
ஊற்றுகின்றாய் கண்ணீரை நிறுத்தவென்று
ஆனால் நானோ இப்ப தாச்சியே இல்லாமல்
கிளித்தட்டு ஆடுகின்றேன் ..........................!!!
 

திங்களும் தென்றலும்

திங்கள் வரக் காத்திருந்தேன்
செவ்வாய் வந்தது .. நானோ
இன்று புதன் என்பதை மறந்தேன் !
வியாழன் வெள்ளி சனி ஞாயிறு
மீண்டும் திங்கள் வருமே, ஆனால்
எனை தீண்டும் தென்றல் வருமா ?

பாசம் அறியா பறந்த பறவை

தாலாட்டும் தென்றலே என்
தணியாத தாகமே, ...... உன்
வாசல் தோறும் என் அன்பை
தோறணமாய் தொங்க விடுவேன்
...

தோப்புக்களில் நாம் உறவாடி
மகிழாவிடினும் உனது ஒற்றை
வார்த்தையில் என் உலகையே
மறப்பவன் நானல்லவோ..

பாப்பா பாப்பா என்று நான் உனை
பாசத்தோடு அழைத்தாலும் என்
ஆத்தாவும் நீயல்லவோ ,.. உன்
சுவாசம் என் வாழ்வின் வாசம்

அன்னையாக உனை நினைத்தாலும்
என் இதய மடியில் தவழும் மழலை
நீயல்லவோ அதை நீ அறியாயோ

என்னவளே என் உயிரே உன் ஆயுள்
நீண்டிட என் ஆயுளையும் உனக்கே
அர்ப்பணிப்பேன் நீயே என் உலகமடி 

எதை சொல்ல எப்படி சொல்ல

நான் ஒன்று சொல்லவா ஏன் என்று சொல்லவா
நீ சொன்ன சொல்லிலே நிஜம் இல்லையல்லவா
காரணம் சொல்லவா கவிதையாய் சொல்லவா
கண்களில் பொங்கிடும் கண்ணீரைச் சொல்லவா

தேன் சிந்தும் திட்டுக்கள்

முடியல்லடா சாமி அட ஏன் இப்படி திட்டுறாங்க எதற்கு இப்படி திட்டுறாங்க
திட்டுறாங்க திட்டுறாங்க எல்லோரும் முகநூலில் நல்லாவே
திட்டுறாங்க
அக்கா என்றால் திட்டுறாங்க தங்கை என்றாலும்
திட்டுறாங்க...
குமரிகளும் திட்டுறாங்க, ஐயோ ஐயோ கிழவிங்களும்
திட்டுறாங்க
ஏன் திட்டுறாங்க எதுக்கு திட்டுறாங்க பெயரை சொல்ல சொல்லி திட்டுறாங்க
வாடி போடி நண்பி என்று சொல்லச் சொல்லி ஓடிவந்து கூடி திட்டுறாங்க
பேசினாலும் திட்டுறாங்க பேசாமல் இருந்தாலும் ஏன்தானோ திட்டுறாங்க
உண்மையா முடியல்லடா சாமி .. ஹா ஹா ஹா ஹா ..

அன்பு சிறையில் சிக்கிய இதயம்

உன் அன்பெனும் சிறையில் சிக்கிக்கொண்டேன்,
தவறுகள் செய்தால் தண்டித்துவிடு ,,,,, ஆனால்
மன்னித்து விடுதலை மட்டும் செய்துவிடாதே,
அப்புறம் நீ கொலைகாறி ஆகிவிடுவாய்...........!!!!!

சிந்திக்கவே சிரிக்க அல்ல

கசநோய்க்கு விசவாய்வு மருந்தாம்,
குப்புறப்படுத்து உள்நாக்கில் படாது
அண்ணாக்காய் குடிக்கணுமாம்;
ஐயோ இது என்ன புண்ணாக்கு கதை
என்று மல்லாக்கய் படுத்திருந்து
சன்னதம் கொண்டானாம்,..............!!!

புரியாத அன்பு


நம் வீட்டு முற்றத்திலே நின்று உறவுகளுடன்
செல்ல யுத்தம் போடுவதையே வெக்கமாக
கருதும் இனத்தில் பிறந்த ..........நீ..............
நட்ட நடு வீதியிலே நின்று கத்திச் சத்தம்
போடுகிறியே பெரும் கேவலமாக ......
அங்கத்தில் ஆடை விலகுவது மட்டுமல்ல
வார்த்தைகளில் ஆடை குறைவதும் அநாகரிகமே
இதை எத்தனை முறை சுட்டிக்காட்டியும் உன்
கூரிய புத்திக்கு எட்டவில்லையா ... இல்லை
சொல்பவனின் அன்பு என்றுமே உன் இதயதிற்கு
கிட்ட இல்லையா.......... ??

உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது

எங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு
என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து
செய்வதை விட ,,,,
எங்களுக்கு ரொம்பவே பிடித்தவர்களுக்கு
என்ன பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து
அதை செய்யாமல் இருப்பது தான்
உண்மையான அன்பு !

இச்சையும் கொச்சையும்

மச்சவல்லவனுக்கு இச்சையின் சாயத்தால்
பச்சை குத்துவதால் அச்சம் பிறந்திடுமோ,
வித்தை தெரிந்தவன் கொச்சைப் படுவதால்
வீரம் சரிந்திடுமோ விவேகம் குறைந்திடுமோ ?

பள்ளிப் பாதயிலே முளைத்த கள்ளிச்செடி


சங்கு சுட்டு விற்ற காசில் நான்
சங்கத்தமிழ் கற்று வந்தேன்
பூம்பாளை பொறுக்கி விற்று
புத்தகத்துக்கு உறைபோட்டேன்
கங்குமட்டை காலில் அணிந்து ...
நொங்கு பொறுக்கச்செல்வேன்
கொக்காரை எடுத்துவந்து என்
அக்காளைச் சமைக்க வைப்பேன்
பன்னாடைக்கிடையினிலே பறநாகம்
படுத்திருந்து தன் பல்லாலே
பதம் பார்க்க, பரியாரி வீட்டினிலே
நான் பலமாதங்கள் படுத்தேனே
எனக்கு பரலோகப் பதவி என்று
பரியாரி சொல்லக் கேட்டு பரிதாபப்
பட்ட அப்பன் பெரும் குடிகாரன்
ஆனதாலே என் பள்ளிப் பாதயிலே
பல கள்ளிச் செடி முளைத்ததடா ...!!!
 

வாழ்கை போடும் கணக்கு


ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று ஒருத்தன்
சொன்னான் ஓடி வந்து
இரண்டில் ஒன்று கடந்து போனால் மிகுதி
உள்ளது மூன்று என்று
நடந்து போகும் இவனின் கதையால் துவண்டு...
போனேன் நானும் அன்று
நாலும் நாலும் எட்டாய்ப் போக நடுவில் உள்ளது
பத்து என்றான்
குத்துமதிப்பாய் சொல்லிவிட்டேன் பித்துப்பிடித்தவனே
வரட்டா என்றான்
கட்டிப்பிடித்து அவனை மடக்கி காலில் விழுந்து
வணங்கி எழுந்து
சுத்தமாக எனக்கு புரியல்ல என்றேன், உத்துப்பார்த்து
சிரித்து விட்டு
செத்துப் போன வெற்றுடலுக்கு சத்துணவு கொடுக்கச்
சொன்னான்.......!
 

அறியாமல் தவிக்கும் மனசு



அன்பென்றேன் அறிவென்றேன் ஆனந்தத்தின்
திடல் என்றேன்
நீயென்றேன் நானென்றேன் நினைவுகளில்
சுகமென்றேன்
கவியென்றேன் பொருளென்றேன் கண்ணீரின்...
கதையென்றேன்
அதுவென்றேன் இதுவென்றேன் அறியாமல்
நான் நின்றேன்
எதுவென்றே தெரியாமல் எதற்க்காக எனை கொன்றேன் !

Sunday, 30 November 2014

மனித மனங்கள்

இருப்பது போதும் என்பவன் ஒருத்தனும் இல்லை
கொடுப்பதைத் தடுப்பவன் நிலைப்பதும் இல்லை
வாலாட்டிப் பிழைப்பவன் மனிதனும் இல்லை
பன்னீரில் குளிப்பவன் கண்ணீரை மதிப்பதில்லை
போராட மறுப்பவன் சரித்திரம் படைப்பதில்லை.. !

என் உயிரே நீ தான்

அன்பே என் நிழலே நீயான போது
உன் நினைவுகள் கரைந்தோடுமா
உன்னை மறக்கின்ற நிலை வந்தால்
என் உயிர் பிரிந்ததென்று பொருளானதே
எனை மண்ணில் புதைக்கின்ற போதினிலும்,
உன் நினைவுகளே என் கல்லறை சுவராகுமே

பொய் சொல்லப்போறேன்


பொய் சொல்லப்போறேன்
பொய் சொல்லப்போறேன்
பொறுப்பேதும் இல்லாமல்
நான் பொய் சொல்லப்போறேன்
பருப்போ நீ என நினைக்காமல்...
விருப்போடு கதை கேட்டு
வெறுப்பேதும் இல்லாமல்
நீங்கள் கருத்து சொன்னால்
நான் மறுப்பேதும் இல்லாமல்
பொய் சொல்ல வாறேன்.... !!!

குணங்களின் கோலங்கள்

தகறாறு பிடித்தவள் தட்டெடுத்து கொடுக்க
அகங்காரம் பிடித்தவள் ஆரத்தி எடுக்க
விதண்டாவாதம் பிடித்தவள் விளக்கேற்ற
பிடிவாதம் பிடித்தவள் பின்னிருந்து தள்ள
அடங்காப்பிடாரி சிலைபோலே நின்றாளாம்

உலக்கையை உளியாக்கும் உறவுகள்

முருங்கை மரத்தில் இருக்கை செய்து உறவை
அமர்த்த நினைக்கும் மனதினிலே, நறுக்கப்பட்ட
உணர்வுகளில் துட்டெடுத்து உலக்கை செதுக்கி
உளிப்பிடியான கதையும் நானே................ !

கிழவியின் கும்மாளம்

நிலவில் உடைந்த துண்டு
மணலில் விழுந்ததென்று
கரையில் வாழ்ந்த நண்டு
கவிதை வடிக்கக் கண்டு
நரிகள் மயக்கம் கொண்டு...
தரையில் புரண்டதென்று
குருடன் கதையை கேட்டு
கிழவி நடனம் போட்டாள் !

சீராக இருப்பதா நேராக நடப்பதா


சீராக இருப்பவன் காணாமல் போகின்றான்
நேராக நடப்பவன் வீணாகப் போகின்றான்
தீயாக எழுபவன் தீக்கிரை ஆகின்றான்
தீராது உழைப்பவன் சோறின்றிச் சாகின்றான்
சோத்துக்கு உழைப்பவன் சேற்றில் வாழ்கின்றான்...
ஊருக்கு உழைப்பவன் கூத்தாடி ஆகின்றான்
உறவாக நினைப்பவன் உயிரையே எடுக்கின்றான்
கொடுத்து தின்பவன் கோமாளியாகின்றான், ஐயஹோ
கெடுத்து பிழைப்பவன் கொழுத்துத்திரிகிறான்........!!!
 

வடுக்கள்

கசக்கியெறிந்த காகிதம் கூட கவிதை வடிவில்
ஆயுதம் ஆகலாம், புறத்தீ பேசும் மரத்த நெஞ்சில்
கறுத்த மையால் இழுத்த கோடுகள் .... !!!

மூடர்கள்


புகை நடுவிலே பகை இருப்பதாய்
விதை விதைக்கிறாய்
உயிர் இல்லாமல் உடல் கிடப்பதாய்
பறை சாற்றுகிறாய்
உறவே அறுந்து தான் போனதாய் ...
உற்சாகம் கொள்கிறாய்
உலகே எதுவென்று புரியாத மூடர்கள்
ஓலங்கள் போடுகிறார்
வேற்று உலகத்தில் கூத்து நடப்பதை
ஆந்தைகள்அறிந்திடுமோ
பார்த்து சிரிக்கின்ற கூட்டுத் தலைகளின்
பித்தம்தெளிந்திடுமோ
சத்தங்கள் போட்டால்தான் முத்தங்கள் என்று
சாத்திரம் ஒன்றுமில்லை
முற்றத்தில் பூக்கவும் முத்ததில் வியர்க்கவும்
சத்தங்கள் தேவையில்லை
நான் ஒற்றையில் நிற்பதாய் நீ சத்தங்கள்
செய்வதால் நம் ஒற்றுமை சாவதில்லை...!!!

புதிர்

தெரியாத விடையத்தை புதிர் போட்டு செல்வதும்
புரியாத மொழியிலே பரிகாரம் சொல்வதும்
விடியாத பொழுதுக்கு திரை போட்டு மறைப்பதும்
அறியாத மூடரின் முறைகெட்ட செயலாகும்....

ஓட்டுப்போட்டு ஓடாய்த் தேய்ந்து போனோமே

ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓடாய்த் தேய்ந்து
போனோமே
எல்லா ஓட்டும் இங்கே இப்போ செல்லா
ஓட்டாயானதே
போட்ட ஓட்டின் உரிமை எல்லாம் எங்கள்...
உயிரைத்தானே கொல்லுதே
நியாயம் நீதி நலிந்த போதும் நாவடக்கம்
இல்லையே
நாளை மலரும் பொழுது என்ற நம்பிக்கையும்
போனதே
ஏனோ தானோ என்று மக்கள் தொடர்ந்தும் ஓட்டுப்
போடுதே
நடந்து போகும் பாதை கூட விழுந்து எழும்ப
வைக்குதே
கடந்து போன காலம் கூட இதற்கு மருந்து போட
மறந்ததே.

என்னவளும் நீயல்லவா


செந்தமிழில் சொல்வடித்து தேனமுதில்
தொட்டெடுத்து கட்டழகி உன் வகிட்டில்
முத்தமாக இட்டிடவா
மல்லிகையில் மலர் கொய்து தங்கத்திலே
அதைத்தடவி மங்கை உந்தன் தலை கோதி...
மாலையாக சூடிடவா
திங்களிலே ஒளிபறித்து சந்தனத்தில் அதைக்
குழைத்து வஞ்சி உந்தன் மேனியெங்கும்
மருதாணி பூசிடவா
முக்கனியில் சாறுபிழிந்து சக்கரையில் தான்
கலந்து வித்தகி உன் சொக்கயிலே முத்திரையாய்
பதித்திடவா
பாலருகில் கொடி வளைத்து பவளங்களை அதில்
கோர்த்து முத்தழகி இடுப்பினிலே ஒட்டியாணம்
கட்டிடவா
இந்திரன் சபையினிலே சந்திரன் தலைமையிலே
ஏழுலக அழகியென்று ஏட்டிலே பதியும்படி
கட்டளையிட்டிடவா
மண்னுலகுக்கே காணிக்கையாய் மாந்தர்களில்
மாணிக்கமாய் விண்ணுலகே அஞ்சி நிற்கும்
என்னவளும் நீயல்லவா
 

என் உயிரே நீ



என் உயிரே நீ குழந்தையாகவே இருப்பதால்
நானும் குழந்தையாகிறேன்
உன் சிறுபிள்ளைத்தனத்தினிலும் சிணுங்கலிலும்
இணைந்திருக்க,
அக்கணத்தில் இருந்தேனும் எனை நீ திட்டாது...
அன்போடு அணைப்பாயென
உன் பிடிவாதங்கள் பலகோடி அதில் நான் பித்தானது
உனக்குத் தெரியாதோடி.. ???
 

நர்த்தனத்தின் நடுவினிலே

நர்த்தனத்தின் நடுவினிலே நானும் இல்லை
மெத்தனம் ஒன்று தானோ உந்தன் எல்லை
சித்தாந்தம் பயில்விக்கப் போவதுமில்லை
தத்துவம் கேட்டு நான் வாழ்வதும் இல்லை
முத்திரை பதிப்பதாய் நீயும் எண்ணி சத்தியம்
தவறுவதும் நியாயம் இல்லை........................!!!

வெந்த நெஞ்சம்

உருக்குலைந்து போகும் உறவின் நிலைதனிலே
கருக்கலைந்து காதல் கண்ணீரில் வாடுகின்றதே
செருப்படிபோல் செவிமொழி புகுந்த சொல்லில்
நெருப்பினில் விழுந்து நெஞ்சம்தான் வெந்ததே ...

சொர்க்கத்தில் நாம்

பக்கத்திலே நான் இருக்க வெக்கத்திலே
நீ குளிக்க
சொர்க்கதிலே நமக்காக குத்தகைக்கு
இடம்பார்க்க
செவிகளிலே சத்தமின்றி சங்கீதம் ...
நான் படிக்க
சிறகடிக்கும் இதழோரம் தேன் குடிக்க
நான் தவிக்க
அறியாத உன் விழியோ அங்குமிங்கும்
தான் துடிக்க
மொத்தத்தையும் மெத்தையிலே முத்ததாலே
மொழிபெயர்க்க
முத்தத்தின் சத்ததிலே மெத்தையிலே
நீ நெழிய
நடமாடும் உன் இடையில் நான் இதமாக
சுழுக்கெடுப்பேன்......

உடைந்த இதயம்


சிலந்தி வலையில் சிங்கம் சிக்கி
செத்துப்போனதா சரித்திரம் உண்டோ
பறந்து போகும் பருந்தை பிடித்து
விருந்து வைத்தல் தகுமோ
உடைந்து போன குவளைக்குள்ளே...
வடிந்து ஓடும் நீரைப் போலே
கடந்து செல்லும் கால்கள் கண்டு
இடிந்து போகா இதயம் எதுவோ.... ?

நான்


உரசினால் தேய்பவன் இல்லை நான்
அலசினால் கரைபவன் இல்லை நான்
மோதினால் உடைபவன் இல்லை நான்
வீசினால் தொலைபவன் இல்லை நான்
வெட்டினால் வீழ்பவன் இல்லை நான்...
தட்டினால் சாய்பவன் இல்லை நான்
ஊதினால் அணைபவன் இல்லை நான்
தீயென எரிபவன், எனை ஒட்டிக்கொண்டால்
உன்னை கட்டிக் கொள்வேன் இல்லை
முட்டிப் பார்த்தால் உன்னை.........................!!!

நான் கிறுக்கும் ஓவியம்

நான் கிறுக்கும் இடமெல்லாம்
உன் முகத்தின் ஓவியமே
நாள்தோறும் என் நினைவில் நீ
ஆடும் தோரணமே
என் உயிரில் கலந்தோடும் உன் ...
உயிரில் வாழ்கின்றேனே
நீ பிரிந்து சென்றாய் என்றால் என்
உடலும் தீக்கிரையே

நான் நானாக தான் இருப்பேன்



நீ ஏகலைவனாக இரு, ஏன் பீஷ்மராக
முயற்சி செய் .. ஆனால் என்னை
துரியோதனன் ஆக்கிவிடாதே
துயிலுரியும் கொள்கையில் நான் இல்லை.!

உயிர் இல்லா ஓவியம் நான்



உயிர் இல்லா ஓவியம் நான்
கதிர் இல்லா சூரியன் நான்
கரு இல்லா காவியம் நான்
பொருள் இல்லா கவிதை நான்
செருப்பு இல்லா கால் கொண்டு
நெருப்பு மீதி நடக்கும் சித்தெறுப்பு நான்

Tuesday, 2 September 2014

பத்தன் நான்




உடுக்கைச் சத்தத்தில் உருவாடும்
பத்தன்போல், உன் கடைக்கண்
பார்வையில் தடுமாறும் பித்தன் நான்
உளியின் அசைவினில் உருமாறும்
கல்லைப் போல் , உன் நகைப்பின்
உச்சத்தில் சிலையான சித்தன் நான் !

உனக்காக நானடி



என்னவளே என் இதயதுடிப்பின் நாதமானவளே
நீ கரையானால் உனை தழுவும் அலையாவேன்
நீ அலையானால் உனை அலங்கரிக்கும் நுரையாவேன்
நீ நுரையானால் உனக்குள்ளே நான் காற்றாவேன்
நீ காற்றானால் உன் இசைவுக்கு ஆடும் கொடியாவேன்...
நீ கொடியானால் உனக்கே நான் கனியாவேன்
நீ கனியானால் அதற்குள் நான் விதையாவேன்
நீ விதையானால் நானே உந்தன் முளையாவேன்;
உன் சிப்பந்தி நானடி என் செல்லமே நீயடி .......!!!

உனை பார்க்காமல் இருக்க முடியவில்லை



பாராமல் இருப்பதற்கு பார்க்காமலே இருந்திருக்கலாம்
பேசாமல் இருப்பதற்கு பேசாமலே இருந்திருக்கலாம்
இதிலே பாராமலும் பேசாமலும் பாதிப்பு யாருக்கு.....???

ஏன் இந்த தற்பெருமை



உன்னாணை இதை கேளு என்னாணை இது உண்மை
விண்ணாணம் பிடிச்சதுகள் வெளிநாட்டில் இருந்து
வந்து தன்ரபாட்டிலெ இருந்ததுகளை எல்லாம் இப்ப
திண்டாட எல்லோ வைக்கினம்...
நல்லூர் கொடியெறிட்டுது இனி நாசமாய் போச்சென்பேன்...
காவடி ஆடுவதை விட இவை கையிலே ஐபார்ட்டை வைத்து க்கொண்டு கண்டபடி ஆடினமெண..
படிக்கிற பிள்ளை எல்லாம் பரனாசமாய் போகுதண
உந்தக் கதையை ஆருக்கண நான் சொல்லி அழ
சின்னம்மா பேரன் சின்னனிலே போனானே இப்போ
சிவத்துக் கொழுத்து சிறிலங்கா வந்திருக்கிறான்,. என்ன
என்னண சொல்லுறாய் எப்பண வந்தவன் எனக்கு தெரியாதே
காதில கம்மலும் தலையிலெ சாயமும் சந்தனப் பொட்டோடு
சன்னதிகோயிலில் நிண்டானே,
அறுந்து போக சவுக்கு மரத்துக்கு சால்வ போர்த்ததுபோல்
குறுக்கு மறுக்க நடந்து திரிந்தானே அவனாண உவள் பேரன்
கோதாரி விழுந்து போக இது என்ன கொடுமையண..........!
தறுதலையை தலைப்பிள்ளையாய் பெற்றெடுத்து தாயும்
தகப்பனும் தவியாய் தவிக்கினமே........................................ !!!

முத்தமிடு இல்ல சத்தமிடு




உள்ளம் உளறும் ஊமைப் பாஷை உயிரில் பொங்கும்
உணர்வின் ஓசை .... !!!

காதல் கனிந்து வந்தால் கன்னத்திலே முத்தமிடு
இல்லை என் கல்லறையில் வந்து சத்தமிடு......!!!

உற்றுப்பார்த்து கற்றுக்கொள்



உனை சுற்றி நடப்பதை உற்றுப் பார்த்து
கற்றுக்கொள்
பின் நன்மை தீமைமைகள் என்னவென்று
ஏற்றுக்கொள்
அதில் நல்லவற்றை மட்டும் உனதாக
பெற்றுக்கொள்...
உனை நாடிவரும் நல் உள்ளங்களை
பற்றிக்கொள்
அதன்பின் பல வெற்றிக் கனிகளை தட்டிச்
செல்ல என் வாழ்த்துக்கள் !

தீப்பிடிக்கும் புன்னகை




அவள் மூச்சுக்காற்று படுகின்றதே, என்
மூளைவரையினில் தொடுகின்றதே
தீயை நெஞ்சில் மூட்டுகின்றதே, அதில்
என் தேகம் முழுவதும் சுடுகின்றதே
ஆசை நெருப்பினில் கொதிக்கின்றதே
அவள் அங்கம் தணலாய் யொலிக்கின்றதே
பூவே எதற்கிந்தப் பூகம்பம்.................. உன்
புன்நகைப்பிலும் ஏன் இந்தத் தீப்பந்தம் ...?

Monday, 1 September 2014

பூஜை செய்தும் விடியவில்லை

பூதங்கள் நடுவிலே பூஜைகள் செய்கிறாய்
புரியாத மொழியிலே பரிகாரம் சொல்கிறாய்
விடியாத பொழுதுக்கு விளக்கேற்றி வைக்கிறாய்
படியாத உறவுக்கு கடிவாளம் பூட்டுகிறாய்
கதவில்லா அறைக்குள்ளே கடிகாரம் மாட்டுகிறாய்
கருவில்லா கவிதையை கைகளில் நீட்டுகிறாய்
முடிவில்லா வாழ்க்கையை விதி என புலம்புகிறாய்.. !

தமிழுக்கு உண்டு தனித்துவம்



நான் தனித்துவம் பெறுவதற்கு எனக்கு 

எந்த மகத்துவம் தேவையில்லை, 


என் தமிழ் ஒன்றே போதுமென்பேன் 


என்னை விளைகின்ற மண்ணில்


விதைப்பவனில்லை நான் விதைக்கின்ற .

..
இடந்திலே முளைப்பவன்...


நடிக்கின்ற ஒன்றுக்காக பறப்பவன் இல்லை 


நான் இருக்கிற ஒன்றுக்காகத் துடிப்பவன்


கிடைக்கிற ஒன்றை வைத்து சிரிப்பவன் இல்லை


நான் விரும்பிய ஒன்றை செய்து முடிப்பவன்......!!!


ஊர்வலத்தில் எருக்கலம் பூ


மூங்கிலிலே மணவறை தினம்
மூச்சடக்க அர்ச்சனை
எருக்கலம் பூ மாலை அணிந்து
எருதுமேலே ஊர்வலம்
நாதசுவர துளைகளிலே நாக்கிளிபுளு
சுரமமைக்குமா.....???

பாப்பாவின் பாமாலை

உந்தன் மடலில் எந்தன் உயிரை
ஏந்திப்போகும் கவிதை கண்டேன்
கண்கள் கலங்கிக் காதல் என்னும்
உணர்வை அள்ளித் தின்றேன்

வாழ்த்து சொல்லும் போதினிலும்
உன் வலியை உணர்ந்து கொண்டேன்
வளைவுகள் இல்லா வாழ்வே ஏது
நம் வழியில் கொண்டு சேர்ப்பேன்

என் தேசம் போல் நெருங்கியில்லாவிடிலும்
மொழியைப் போல உன் மூச்சில் வாழ்வேன்
வானம் பரவும் வானவில் கண்டால்
வாழ்வில் வந்த வசந்தங்கள் என்பேன்.

உன் அன்பை கண்டு மார்பில் தட்டி
நம் உறவை உரக்கச் சொன்னேன்
பிறந்த நாளில் உன் வாழ்த்தை கண்டு
நான் இறந்து போகப்பார்த்தேன்.......... !

கவிதையானோம் அன்பால்

காதல் என்னும் காவியத்தில்
நீயும் நானும் கவிதையாய்
காலமெல்லாம் கவிபடைக்க
உன் அன்பு ஒன்றே போதுமடி.
எனை தீண்டும் தென்றல் கூட...
உந்தன் பெயரைச் சொல்லுதடி
அலைகள் உரசும் கரையில் உந்தன்
பிஞ்சுப் பாதம் கொஞ்சும் போது
என் நெஞ்சம் கூட மஞ்சம் போடி
நினைவு வெள்ளம் பொங்கி வந்து
எந்தன் கண்ணில் நீராய் சிந்துதடி
உயிரே உந்தன் உணர்வை அள்ளி
உதிரிப்பூவை நானும் எண்ணி
மார்பில் சூடிக்கொள்ளும் போது
மயங்கிப்போறேன் கள்ளி வாடி..!

குருடன் துதிக்கை பல்லாக்கு தூக்குமா.?

அகண்ட வெளியில் திறந்த பாதை
கடந்து போக முடியவில்லை
நடந்து போகும் வழியில் ஏங்கும்
உடைந்து போன உள்ளப்பலகை
சிதடன் தடக்கை சிவிகை தூக்குமோ...?

சொன்னால் சொன்னது தான்

அடிக்கிற அலையிலே மிதக்கின்ற நுரையாக
கொதிக்கிற உலையிலே துடிக்கின்ற மீனாக
பறக்கிற உலகிலே நடக்கின்றேன் தனியாக
வலிக்கிற போதினிலே நடிக்கின்றேன் நலமாக
இன்னும் எப்படி இருந்தாலும் என் ஆயுள்
இருக்கும் வரையில் இருப்பேன் உனக்காக