Wednesday, 20 July 2016

நியாயம் இல்லா வாதங்கள் ***

குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டால்
துடக்கு என்று தள்ளி நிற்கிறாய்

பசிக்கு கெஞ்சி சோறு கேட்டால்
சொடக்கு போட்டு தள்ளி வைக்கிறாய்

குழப்பம் கொள்ள விளக்கம் கேட்டால்
பழக்க வழக்கம் என்று தர்க்கம் செய்கிறாய்

சடலம் ஆன பின்னுமா மண்ணில்
நீ வீண் கலகம் மூட்டிப் போகணும்

படலை தாண்டி சுடலை போனால்நீயோ
சாம்பலாய் கடல் நீரில் தானே கரைகின்றாய்.!

விளக்கம் சொல்லாப் பழக்கங்கள்


தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டால்
பாவம் என்று வாதம் செய்கிறாய்

கோபம் கொண்டு நியாயம் கேட்டால்
காலம் இடும் கோலம் என்றாய்
...

தேகம் சுடும் வேகம் கண்டு, இதன்
சாபம் என்ன சொல்லு என்றேன்

ஞானம் வந்து ரோசம் கொண்டேன்
தாளம் போடும் மோகம் என்றாய்

ஜாலம் செய்யும் வார்த்தை எய்து
மாயம் செய்யும் மர்மம் ஏனோ ...?

நித்திரை கலைத்த முகத்திரை ***

சொப்பனம் வந்ததில் சுகமொன்று கண்டேன்
அப்புறம் நடந்ததை எவரிடம் சொல்வேன்

முப்பெரும் தேவிகள் முழுவதும் இவளோ
முப்பெரும்தேவியே இவளில்த்தான் உருவோ

ஒப்பனை வெள்ளத்தில் உறைந்தது
என் உயிரோ செப்பிட முன்னே சிவந்தது ஏன் இதழோ

கத்தரிவெயிலில் கருகிய மலர்போல்
கட்டிலில் கிடந்தும் நான் கானலில் குளித்தேன்

சட்டென்று வந்தவள் முத்தங்கள் பொழிந்திட
யுத்தங்களின்றியே இரத்தங்கள் கசிந்தன

முத்திரை பதித்தவள் முகத்திரை கிழிக்கமுன்
பித்தங்கள் தெளிந்திட நித்திரை கலைந்தது !


Sunday, 10 July 2016

சுவாசத்தில் நுழைந்த குட்டித்தென்றல் ***



தவம் ஏதும் இருக்கவில்லை
தரணி எங்கும் தேடவில்லை
தானாகத் தேடிவந்து, என்னை
தழுவுதே ஒரு குட்டித்தென்றல்

யாரோ யாரோ நீ யாரோ ...
என் யாவிலும் கலந்தது நீ தானோ
யன்னல்வழி வந்த வசந்தமோ
யமுனை உந்தன் சொந்தமோ

மானாக துள்ளும் மங்கையோ
மயிலாக ஆடும் நங்கையோ
மலர்வாசம் வீசும் பூவையோ
மனசை அள்ளும் பாவையோ

செடியில் பூக்காத செம்பூவே
செதுக்கி எடுக்கா பெண்சிலையே
செந்தமிழ் சிந்தும் தேனமுதே
செந்தாழம் பூவின் வடிவழகே

என் மஞ்சம் உந்தன் மடிதானடி
என் தஞ்சம் உந்தன் நிழல்தானடி
என் நெஞ்சம் உந்தன் வசம் தானடி
என் சுவாசக் காற்றே நீ தானடி..!


பஸ்பமானாலும் உன் பாதத்தில் புஸ்பமாவேன் ***

எல்லோருக்கும் எழுதிய நான்
இன்று எனக்காக எழுதுகிறேன்
அன்பே உனக்கென ஒரு கவிதை

கனத்த உள்ளத்தில் களைபறிக்க
வந்தவன் நான், களைபறிக்கமுன்
எனைக் களவாடிச் சென்றவள்...நீ

மண்வாசப் பேச்சினாலே தன் வசம்
கொண்டவளே பெண் நாணம் என்ன
என்று விண்ணாணம் புரிந்தவளே

தன்மானம் தடுக்கவில்லை எனக்கு
தலைகுனிவாய் நினைக்கவில்லை உன்
சொல்வாளால் கிழித்தபோதும்

தத்தை உந்தன் மெத்தையிலே நான்
தனியிடமும் கேட்கவில்லை அத்தை
மகன் நீயென்று அரவணை போதுமடி

அக்கினியை ஏவி எனை நீ பஸ்பமாய்
எரித்தாலும் காற்றோடு கலந்து வந்து
உன் காலடியில் நான் விழுவேனடி !


அன்புக்கு அடிபணியாதே

எப்போது எல்லாம் நீ கோமாளியாகவும் ஏமாளியாகவும் இருக்கின்றாயோ
அப்போதெல்லாம் நீ அன்பானவனாகவும்
பாசமுள்ளவனாகவும் கருதப்படுவாய்

...
எப்போதெல்லாம் நீ அன்புக்கும் பாசத்துக்கும்
மதிப்பளித்து அடிபணிகின்றாயோ

அப்போதெல்லாம் நீ ஏமாளியாகவும் பெரும்
கோமாளியாகவும் ஆக்கப்படுவாய்.

Saturday, 9 July 2016

மனிதா நீ யார்???



ஒரு சிங்கம் ஒரு சிங்கம்தான்
ஒரு குரங்கு ஒரு குரங்குதான்
ஒரு மான் ஒரு மான் தான்
ஒரு பாம்பு ஒரு பாம்பு தான்
ஒரு காகம் ஒரு காகம்தான்
...
ஒரு நரி ஒரு நரிதான்,.. ஏன்
ஒரு பேய்கூட ஒரு பேய்தான்
ஆனால் இந்த ஒரு மனிதன்
மட்டும் ஒரு மனிதனே இல்லயே
அது எப்படி. .... ஏன்......எதற்கு....???

என் சிந்தையில் விந்தையடி நீ



பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
உன்னை எனக்கு பிடிச்சிருக்கு
என்று சொல்லிச் சொல்லியே


பிடிச்சிருக்கு என்ற வார்த்தையே...
எனக்கு பிடிக்காமல் போயிடுமோ
என்று பயமாக இருக்குதடா



என் சிந்தை முழுதும் விந்தைகள்
புரியும் மந்திரம் நீயடா என்று..... நீ
சிணுங்கும் போதெல்லாம்,


பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உன்னை
எனக்கு ரொம்பத்தான் பிடிச்சுருக்கடி
என் இராசவள்ளிக்கொடியே !

கொடுத்து வைத்த தாச்சிச்சட்டி

கொக்கான்வெட்டும் உந்தன்
விழிகள் என்னை கொத்தித்
திங்குதடி


கொக்கரிக்கும் உன் இதழ்கள்...
என் மனதை ஏன் மக்கரிக்க
வைக்குதடி



கொட்டிக்கிழங்கே உன் வீட்டில்
தாச்சிச்சட்டி கூட தலைக்கனம்
கொள்ளுதடி,


முட்டை குனிந்து நீ பொரிக்கையிலே
உன் சட்டை விலகியதை தான்மட்டும்
பார்த்ததினாலோடி ?