Tuesday, 2 September 2014

பத்தன் நான்




உடுக்கைச் சத்தத்தில் உருவாடும்
பத்தன்போல், உன் கடைக்கண்
பார்வையில் தடுமாறும் பித்தன் நான்
உளியின் அசைவினில் உருமாறும்
கல்லைப் போல் , உன் நகைப்பின்
உச்சத்தில் சிலையான சித்தன் நான் !

உனக்காக நானடி



என்னவளே என் இதயதுடிப்பின் நாதமானவளே
நீ கரையானால் உனை தழுவும் அலையாவேன்
நீ அலையானால் உனை அலங்கரிக்கும் நுரையாவேன்
நீ நுரையானால் உனக்குள்ளே நான் காற்றாவேன்
நீ காற்றானால் உன் இசைவுக்கு ஆடும் கொடியாவேன்...
நீ கொடியானால் உனக்கே நான் கனியாவேன்
நீ கனியானால் அதற்குள் நான் விதையாவேன்
நீ விதையானால் நானே உந்தன் முளையாவேன்;
உன் சிப்பந்தி நானடி என் செல்லமே நீயடி .......!!!

உனை பார்க்காமல் இருக்க முடியவில்லை



பாராமல் இருப்பதற்கு பார்க்காமலே இருந்திருக்கலாம்
பேசாமல் இருப்பதற்கு பேசாமலே இருந்திருக்கலாம்
இதிலே பாராமலும் பேசாமலும் பாதிப்பு யாருக்கு.....???

ஏன் இந்த தற்பெருமை



உன்னாணை இதை கேளு என்னாணை இது உண்மை
விண்ணாணம் பிடிச்சதுகள் வெளிநாட்டில் இருந்து
வந்து தன்ரபாட்டிலெ இருந்ததுகளை எல்லாம் இப்ப
திண்டாட எல்லோ வைக்கினம்...
நல்லூர் கொடியெறிட்டுது இனி நாசமாய் போச்சென்பேன்...
காவடி ஆடுவதை விட இவை கையிலே ஐபார்ட்டை வைத்து க்கொண்டு கண்டபடி ஆடினமெண..
படிக்கிற பிள்ளை எல்லாம் பரனாசமாய் போகுதண
உந்தக் கதையை ஆருக்கண நான் சொல்லி அழ
சின்னம்மா பேரன் சின்னனிலே போனானே இப்போ
சிவத்துக் கொழுத்து சிறிலங்கா வந்திருக்கிறான்,. என்ன
என்னண சொல்லுறாய் எப்பண வந்தவன் எனக்கு தெரியாதே
காதில கம்மலும் தலையிலெ சாயமும் சந்தனப் பொட்டோடு
சன்னதிகோயிலில் நிண்டானே,
அறுந்து போக சவுக்கு மரத்துக்கு சால்வ போர்த்ததுபோல்
குறுக்கு மறுக்க நடந்து திரிந்தானே அவனாண உவள் பேரன்
கோதாரி விழுந்து போக இது என்ன கொடுமையண..........!
தறுதலையை தலைப்பிள்ளையாய் பெற்றெடுத்து தாயும்
தகப்பனும் தவியாய் தவிக்கினமே........................................ !!!

முத்தமிடு இல்ல சத்தமிடு




உள்ளம் உளறும் ஊமைப் பாஷை உயிரில் பொங்கும்
உணர்வின் ஓசை .... !!!

காதல் கனிந்து வந்தால் கன்னத்திலே முத்தமிடு
இல்லை என் கல்லறையில் வந்து சத்தமிடு......!!!

உற்றுப்பார்த்து கற்றுக்கொள்



உனை சுற்றி நடப்பதை உற்றுப் பார்த்து
கற்றுக்கொள்
பின் நன்மை தீமைமைகள் என்னவென்று
ஏற்றுக்கொள்
அதில் நல்லவற்றை மட்டும் உனதாக
பெற்றுக்கொள்...
உனை நாடிவரும் நல் உள்ளங்களை
பற்றிக்கொள்
அதன்பின் பல வெற்றிக் கனிகளை தட்டிச்
செல்ல என் வாழ்த்துக்கள் !

தீப்பிடிக்கும் புன்னகை




அவள் மூச்சுக்காற்று படுகின்றதே, என்
மூளைவரையினில் தொடுகின்றதே
தீயை நெஞ்சில் மூட்டுகின்றதே, அதில்
என் தேகம் முழுவதும் சுடுகின்றதே
ஆசை நெருப்பினில் கொதிக்கின்றதே
அவள் அங்கம் தணலாய் யொலிக்கின்றதே
பூவே எதற்கிந்தப் பூகம்பம்.................. உன்
புன்நகைப்பிலும் ஏன் இந்தத் தீப்பந்தம் ...?

Monday, 1 September 2014

பூஜை செய்தும் விடியவில்லை

பூதங்கள் நடுவிலே பூஜைகள் செய்கிறாய்
புரியாத மொழியிலே பரிகாரம் சொல்கிறாய்
விடியாத பொழுதுக்கு விளக்கேற்றி வைக்கிறாய்
படியாத உறவுக்கு கடிவாளம் பூட்டுகிறாய்
கதவில்லா அறைக்குள்ளே கடிகாரம் மாட்டுகிறாய்
கருவில்லா கவிதையை கைகளில் நீட்டுகிறாய்
முடிவில்லா வாழ்க்கையை விதி என புலம்புகிறாய்.. !

தமிழுக்கு உண்டு தனித்துவம்



நான் தனித்துவம் பெறுவதற்கு எனக்கு 

எந்த மகத்துவம் தேவையில்லை, 


என் தமிழ் ஒன்றே போதுமென்பேன் 


என்னை விளைகின்ற மண்ணில்


விதைப்பவனில்லை நான் விதைக்கின்ற .

..
இடந்திலே முளைப்பவன்...


நடிக்கின்ற ஒன்றுக்காக பறப்பவன் இல்லை 


நான் இருக்கிற ஒன்றுக்காகத் துடிப்பவன்


கிடைக்கிற ஒன்றை வைத்து சிரிப்பவன் இல்லை


நான் விரும்பிய ஒன்றை செய்து முடிப்பவன்......!!!


ஊர்வலத்தில் எருக்கலம் பூ


மூங்கிலிலே மணவறை தினம்
மூச்சடக்க அர்ச்சனை
எருக்கலம் பூ மாலை அணிந்து
எருதுமேலே ஊர்வலம்
நாதசுவர துளைகளிலே நாக்கிளிபுளு
சுரமமைக்குமா.....???

பாப்பாவின் பாமாலை

உந்தன் மடலில் எந்தன் உயிரை
ஏந்திப்போகும் கவிதை கண்டேன்
கண்கள் கலங்கிக் காதல் என்னும்
உணர்வை அள்ளித் தின்றேன்

வாழ்த்து சொல்லும் போதினிலும்
உன் வலியை உணர்ந்து கொண்டேன்
வளைவுகள் இல்லா வாழ்வே ஏது
நம் வழியில் கொண்டு சேர்ப்பேன்

என் தேசம் போல் நெருங்கியில்லாவிடிலும்
மொழியைப் போல உன் மூச்சில் வாழ்வேன்
வானம் பரவும் வானவில் கண்டால்
வாழ்வில் வந்த வசந்தங்கள் என்பேன்.

உன் அன்பை கண்டு மார்பில் தட்டி
நம் உறவை உரக்கச் சொன்னேன்
பிறந்த நாளில் உன் வாழ்த்தை கண்டு
நான் இறந்து போகப்பார்த்தேன்.......... !

கவிதையானோம் அன்பால்

காதல் என்னும் காவியத்தில்
நீயும் நானும் கவிதையாய்
காலமெல்லாம் கவிபடைக்க
உன் அன்பு ஒன்றே போதுமடி.
எனை தீண்டும் தென்றல் கூட...
உந்தன் பெயரைச் சொல்லுதடி
அலைகள் உரசும் கரையில் உந்தன்
பிஞ்சுப் பாதம் கொஞ்சும் போது
என் நெஞ்சம் கூட மஞ்சம் போடி
நினைவு வெள்ளம் பொங்கி வந்து
எந்தன் கண்ணில் நீராய் சிந்துதடி
உயிரே உந்தன் உணர்வை அள்ளி
உதிரிப்பூவை நானும் எண்ணி
மார்பில் சூடிக்கொள்ளும் போது
மயங்கிப்போறேன் கள்ளி வாடி..!

குருடன் துதிக்கை பல்லாக்கு தூக்குமா.?

அகண்ட வெளியில் திறந்த பாதை
கடந்து போக முடியவில்லை
நடந்து போகும் வழியில் ஏங்கும்
உடைந்து போன உள்ளப்பலகை
சிதடன் தடக்கை சிவிகை தூக்குமோ...?

சொன்னால் சொன்னது தான்

அடிக்கிற அலையிலே மிதக்கின்ற நுரையாக
கொதிக்கிற உலையிலே துடிக்கின்ற மீனாக
பறக்கிற உலகிலே நடக்கின்றேன் தனியாக
வலிக்கிற போதினிலே நடிக்கின்றேன் நலமாக
இன்னும் எப்படி இருந்தாலும் என் ஆயுள்
இருக்கும் வரையில் இருப்பேன் உனக்காக

காமன் அனுப்பிய காமுகி



என் மார்பிலே சாய்ந்தவள் நீயடி
மயங்கிப் போனது நானடி, உன்
கண்ணிலே கவிதைகள் நூறடி
என் நெஞ்சிலே காதல்த்தீயடி
வாடாமல்லிகையே என்னை...
வாரியணைக்கையிலே தேகம்
சூடாய்க்கொதித்து தாகம் எடுக்குதடி
மந்தார மலரே என் சிந்தாத சுடரே
மூடுபனியில் முளைத்த முத்தே
காமன் கடைந்தெடுத்த சொத்தே
சந்தனத்தில் குழைத்த செந்தமிழே
நீ என் அருகில் இருக்கையிலே
முழுநிலவும் பிறைநிலவே ..... !!!

ஒரு நொடி போதுமடி

வரம் கொடுக்க வந்தவனை
வதம் கொள்ளப் பார்க்கின்றாய்
பதம் பார்க்கும் முன்னாலே, ..
தவம் ஒன்று செய்கின்றேன்
பல யுகம் வாழ ஆசையில்லை
சில நொடி வாழ்ந்தால் போதுமென்று !

சாத்திரம் பார்க்கும் ஆத்திகம்


நாளைய வரவுக்கு இன்றைய பொழுதினை
கண்ணீரில் கரைக்கின்றாய்
கற்பனை உதயத்தை ஒத்திகை பார்த்திட
நித்திரை தொலைக்கின்றாய்
உன்னையே அறியாமல் உலகத்தை தவறென...
பழிசொல்லித் திட்டுகின்றாய்
இங்கே ... காத்தாடி கூடவா கூத்தாடி வீட்டிலே
பாத்திரம் ஏற்க வேண்டும்
இந்தச் சோத்துக்குமாடா நீ சாத்திரம் பார்த்து
ஆத்திகம் பேசவேண்டும்......... ???
 

தாத்தா மடியில் நாணயம்

என் தாத்தா மேனியில் சட்டை இல்லை
மடிப்பை இருந்தது
என் அப்பா சட்டையில் ஒரு சட்டைப்
பையிருந்தது
என் சட்டையில் மேனிமுழுதும் சட்டைப்
பையிருக்கின்றது
அதில் அதிகமாக பணமும் இருக்கின்றது,
என் தாத்தாவின் மடியிலும் அப்பாவின் சட்டைப்
பையிலும் பணம் இருந்ததோ இல்லையோ....
ஆனால், நாணயம் இருந்தது.............!!!