Monday, 12 March 2018


உடுக்கடித்து உருக்கொண்டு
உணர்ச்சியிலே கலையாடி
உணர்வுதனில் விளையாடி
உயிர் பறிக்கும் ஓர் தருணம்

கண்ணீரில் விளக்கேற்றி
கரம்கூப்பித் தொழுதாலும்
கருவறுக்கும் காரியங்கள்
கச்சிதமாய் நடப்பதென்ன

சிறுபிள்ளைத் தனம்கொண்டு
சிறிதேனும் வலி அறியா
சிறகொடிக்கும் வேள்விதனில்
சிறு துளியாப் பெருவெள்ளம்

சாதனைகள் சோதனையாய்
சான்றிதழ்கள் வரைந்தாலும்
சாரீரம் இல்லாது இசையோடு
சங்கீதம் சுவைப்பதுண்டோ

எல்லைகள் தாண்டுகையில்
எதிர்ப்புக்கள் தலைதூக்கும்
எண்ணங்கள் எமை ஆண்டால்
எல்லாமே வினையாகும்

பிடிவாதம் புனர்வாழ்வின்
பிடியாணை பிறப்பிக்கும்
பிடித்தவைகள் எல்லாமே
பிடிக்காமல் பரிதவிக்கும்

நரிகள் கூட நமைப் பார்த்து
நாசுக்காய் நகைத்துச்செல்லும்
நன்றியின் வாசலில் நாய்களின்
நாதங்களே கீதங்களாகும்

இனித்தவைகள் கசந்திட்டால்
இனியென்ன செய்யத்தோணும்
இதற்கும் மேல் ஏதுமென்றால்
இறந்துதான் காட்டவேண்டும் !

No comments:

Post a Comment