நேர்கோட்டில் நடந்து சென்றேன்
நினைத்த இடம் அடையவில்லை
தன்பாட்டில் விரைந்து சென்றேன்
பண்பாட்டில் சிறிது தொல்லை
மண் பார்த்து விதைத்ததெல்லாம்
மணம் வீசி மலரவில்லை
பெண் பார்க்கும் விடையத்திலும்
பெரும் போதை தேடவில்லை
பொருள் தேடும் படலத்திலும்
பொன் தேடி அலையவில்லை
பொல்லாத உலகத்திலும்
பொறுப்பற்றுத் திரியவில்லை
நல்லோர்கள் உள்ளத்திலும்
நஞ்சுதனை புதைத்ததில்லை
வல்லோர்கள் வாழ்வினிலும்
வஞ்சனைகள் புரிந்ததில்லை
எல்லாப் பிறப்பினையும்
எனதுறவாய் நினைத்துவந்தேன்
கல்லாய் இருந்ததையும்
கனியாய் மாற்றி வந்தேன்
ஆறுதல் அரவணைப்பில்
அரசனாய் திகழ்ந்துவந்தேன்
அவரா இவர் என்று
அங்கலாய்ப்பில் ஆழ்த்திவந்தேன்
தாழ்வு மனப்பாண்மை
சற்றும் வளர்த்ததில்லை
தவறித்தான் போனாலும்
தப்பித்து ஓடியதில்லை
ஒட்டி உறவாடி
தட்டி கழித்ததில்லை
வெட்டி விட்டாலும்
காட்டி கொடுத்ததில்லை
குட்டி நாயாட்டம்
குறும்பாய் இருந்தேனே
பட்டி ஆட்டுக்குள்
பகிர்ந்து எடுத்துன்னை
அன்பே நீ என்று அரை நொடி
கண்மூடி ஆயுள் ரேகைக்குள்
அழியாமல் உனை அள்ளி
உயிராய் பூட்டிவைத்தேனே
பாட்டியானாலும் கூடிவருவேனே
நாடி தளர்ந்தாலும் ஓடிவருவேனே
என கோவில் படியேறி சாமிகும்பிட்டு
நீ.........நான்.. ஐயோ........வேண்டாம்
இனிச் சொன்னால் அழுதிடுவேன் !

No comments:
Post a Comment