Tuesday, 9 February 2016

நான் யாருக்கு சொல்லி அழுவேன்


நான் யாருக்கு சொல்லியழ
என் ஊருக்குப் பில்லியென
கரையோரம் நடக்கையிலே
நுரை நுரையாய் பறக்குதாமே
...
வடிச்ச கஞ்சி குடிக்கையிலே
பொரிச்ச மீனு மணக்குதாமே
இடிச்சு வச்ச சரக்குக்குள்ளே
இஞ்சி வாசம் காணமாமே

ஊற வைச்ச துணிகூட காயவச்சு
கிடக்குமாமே...... தோச்சு மடிச்சு
வச்ச உடுப்பெல்லாம் ஊத்தையில
மிதக்குமாமே, அடியாத்தி இதுமட்டுமா

நாத்து நட போகயிலே ஏதோ ஒன்று
சேத்துக்குள்ளே ஓடி ஒழிக்குதாமே
தேடி ஓடிப்பார்க்கையிலே தேவாங்கு
போலே உள்ளே மறையுதாமே.....

இதெல்லாம் சுடலை மாடனுக்கு
சுகமான வேலையாமே காட்டேரி
குடும்பத்துக்கும் கொள்ளிவால்
குஞ்சுக்கும் கைவந்த கலையாமே

காளைமாடும் காயப்போட்ட ஒடியலும்
பழுக்கவைச்ச மாங்காயும் துருவி வச்ச
தேங்காயும் காணாமல் போவதற்கும்
இவையள் தான் காரணமாமே

உதெல்லாம் அதுகள் வேலையெண்டு
உடையாராச்சி உருவந்துசொன்னபின்னே
உதுக்குமேல நான் என்னசொல்ல என்று
அன்னக்கிழவி அடிச்சு சொல்லிச்சாமே

எல்லாம் சேர்த்து வைச்சு பார்க்கையிலே
எனக்கு சோத்துக்குள்ளே கைவைக்க
வேர்த்து வடியுதே ஐயோ நான் யாருக்கு
சொல்லியழ என் ஊருக்குப் பில்லியென !
 

கொள்ளி வைக்கும் மெல்லினம்

    பூவே தளிரே என் பூங்கொடியே
    தேனே அமுதே தேன்மொழியே
    அன்பே அழகே என் அரும்சுடரே ..

    மாடப்புறாவே என் மஞ்சள்நிலாவே ...
    தென்றல் காற்றே தென்னம் கீற்றே
    மாலை கதிரே என் மயிலிறகே

    சோலை குயிலே என் சொர்ப்பனமே
    குத்துவிளக்கே குண்டு மல்லியே
    வெட்டி எடுத்த என் வெண்பனியே

    கொட்டிக்கிடக்கும் என் நவமணியே
    எனை வெட்டி மடிக்கும் மெல்லினமே
    தட்டி கழிக்கும் என் வல்லினமே

    ஏனிந்தத் தலைக்கனம் என்னிடமே
    தவணை முறையில் கொல்லிறியே
    தவிப்பில் தினமும் சாகின்றேனே...

    வெட்கத்தை கொஞ்சம் ஒத்தி போடு
    முத்தத்தால் என்னில் கோலம் போடு
    சொர்க்கத்தில் என்னை கட்டி போடு

    இல்லை உன் பக்கத்தில் என்னை
    வெட்டிப்போடு .............!!!

நான் பேசாமல் இருக்கின்றேன்

    அன்று நான் அதிகமாக பேசுகின்றேன்
    என்று நீ பேசாமல் இருந்தாய் நான் என்
    பேச்சை இழந்தேன்
    இன்று நான் அதிகம் பேசவில்லை ...
    என்று எனை நீ பேசுகின்றாய் நான்
    என் மூச்சை இழந்தேன்

    அன்று அன்போடு அளவின்றிப் பேசினேன்
    என்னை உனக்கு பிடிக்கவில்லை
    இன்று அழுதபடி அளவோடு பேசுகின்றேன்
    ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கவில்லயா
    என்கின்றாய் ............!

உயிரில் கலந்த உலகழகி

    காதல் மொழியழகி அன்ன நடையழகி
    மாதர் குல அழகி மயக்கும் சிரிப்பழகி
    கூந்தல் முகிலழகி குயில்கள் குரலழகி

    ...
    கண்ணன் கவி அழகி கருவில் உறைந்தழகி
    எண்ணம் நிறைந்தழகி நினைப்பில் சுமந்தழகி

    உள்ளம் நுழைந்தழகி உயிரில் கலந்தழகி
    உறவாய் வந்தழகி உணர்வில் மிதந்தழகி

    என்றும் இனியவளாய் இவளே என்னவளாய்
    காக்கும் காவலனாய் இருப்பேன் உன்னவனாய்

    என்னுள் நீ வாழ உழைப்பேன் உன்னதமாய்
    வாடி என் உலகழகி எனையாளும் அன்பழகி !

கண்ணீர் துடைக்க ஒரு தினம்

    அந்தத் தினம் இந்தத் தினம்
    என்றெல்லாம் கொண்டாடும்
    நாம்... இனியாவது ஒரு நாள்
    வரதட்சனை ஒழிப்புத் தினம்
    என்றொன்றை கொண்டாடுவோமே...
    அந்த ஒரு நாளாவது பெண்களை
    பெற்ற தாய் தந்தையர்களின் மனம்
    குளிரட்டும் ஓர் ஈர் கன்னியர்களின்
    கண்களில் கண்ணீர் துளிகள் காயட்டும் !