Monday, 12 March 2018

கடவுள் கடவுளென்று
கண்கலங்க வைக்கிறியே
உலகம் உருண்டையென
ஊகிக்க மறுக்கிறியே


வாடா வாடா என்று
வாரி அணைக்கிறியே
வரும் வழி தெரியாது
வாடித் தவிக்கிறேனே


போடா மடையா என்று
பொறுமை இழக்கிறியே
போகச் சொல்லிவிட்டு
பொங்கி அழுகிறியே


பொறுக்கி நீ என்று
நொறுக்கி எறியிறியே
நொறுக்கி எறிந்துவிட்டு
பொறிக்கி எடுக்கிறியே


தடுக்கி விழுந்தவனை
முடுக்கி விடுகிறியே
முடுக்கி விட்டுட்டு
கொழுக்கி போடுறியே


சிறுக்கி இருடி வாறன்
உருக்கி குடிக்கப் போறன்
மயக்கி மார்பில் போட்டு
கிறுக்கி வைக்கிறன் பாரன் !
முழுநேரத் தென்றலிலே
முழுதாய் நனைந்துவிட்டு
அரை நேர ஊதலிலே
அனைத்தும் தொலைத்ததுபோல்

அடுப்படிப் பூனையாக, என்
தவத்தினை மேற்கொண்டு
துடிப்புடன் காத்திருக்கிறேன்
தணல் ஆறும் தருணம் பார்த்து

போர்க்களத்தில் நின்றுகொண்டு
போர்வாளை இழந்தது போல்
நாற்காலியில் முக்கால் குதிரைபோல்
சவாரிசெய்யும் முடவனானேன்

நேற்று நடந்தவையும்
இன்று நடப்பவையும்
நாளை நடக்குமென்றால்
தாளில் செய்திவரும் ....!
உரசிற நீரில் கரையிற மீனாய் இருக்காதே
கழுவுற நீரில் நழுவுற மீனாய் சறுக்காதே

ஓடுற நீரில் எதிர்க்கிற மீனாய் இருந்துபார்

வாழுற போதே வல்லவனாக நீ மிளிர்வாய்
சாகிற போது சா(ச)த்தியம் எனறு பேரிடுவார்

செத்தபின்னும் சரித்திரமாக நீ திகழ்வாய் !


திடரில் நின்று திருவிழா நடத்தினாய்

தினமும் உந்தன் திருவடி பற்றினேன்

இடறிவிட்டு இதயத்தை துப்பினாய்

கருவை கலைத்து உறவை கொழுத்தினாய்

ஆண்டவனே ஆனாலும் அகம் இனி திறவேனே !
உந்தன் அமரிக்கை கண்டு நானோ
அடிமையாகிப் போனதால்...

பிரயத்தனம் செய்து பிரியத்தால்
உனக்கு பிடியாணை பிறப்பிக்க,

அழிச்சாட்டியம் செய்தும் - நீயோ
அன்பில் அக(ம்)ப்பட்டுக் கொண்டாய் !

அடி நீ பட்டுச்சேலை கட்டுவாயென்று
தானடி நான் பட்டுப்பூச்சியாக உருமாற
தவமிருக்க ஆசைப்பட்டேன்..

ஆனால் நீ பாவாடை சட்டை போட்டு
பட்டாம்பூச்சி அல்லவா பிடித்து
விளையாடுகின்றாய்..

போதும் நிறுத்தடி,.. நீ மட்டும் குட்டைப்
பாவாடை போட்டு நான் எட்டுக்கோடு
விளையாடுவேன் என சொல்லிவிடாதே

ஐயோ என் சீயக்காய்த் துண்டே செவ்வாழை
தண்டே என்னால் கட்டாம் தரையாக மட்டும்
பிறந்திட முடியாதடி !

முன்னுக்கு செல்வதில் முரண்பாடென்று
பின்னுக்குச் செல்தலில் பிறக்குது கேடு

கண்ணுக்கு தெரிவது கனவென்று கூறி
விண்னுக்கு அனுப்புறாய் மாபெரும் தூது

யன்னலைப் பூட்டி மின்னலைத் தேடும்
கற்பனை வாழ்வினில் சொப்பனக் கோடு

உள்ளது நல்லது உடன் பிறவாதது
சொன்னது செய்வது செவிக்குதவாதது

போனது தந்தது பொருற்படாதது
நின்றது உண்டது விலைகுறைவானது

உற்றது கற்றது ஊக்கம் தராதது
நட்டது தொட்டது நியாயமில்லாதது

சட்டமும் திட்டமும் கொட்டாவி விட்டது
பட்டினி கண்டதும் வெட்டி நீ வீசிடு

சட்டையில் பைகளோ எத்தனை உள்ளது
பட்டங்கள் வாங்கிய அத்தனை மின்னுது

இத்தனை உண்டெனும் என்னதான் ஆச்சுது
விட்டத்தில் தொங்குற வொளவாலாய் போச்சுது !
பிரியத்தின் விம்பமே
பிரித்திடாத பிரியமே

இதயத்தின் உதயமே
இன்பத்தின் இமயமே

கன்னியத்தின் கவசமே
கருணையின் வடிவமே

நம்பிக்கை துருவமே
நாணயச் சிகரமே

அன்பினில் அரசியே
அழகினில் எழில் நீயே

குழவியின் குணங்களே
குமரியில் குத்துவிளக்கே

தாமரைத் தடாகமே
தங்கத்தின் தழுவலே

சித்திரச் சிங்காரமே
சிதறிய முத்தாரமே

ஓவியக் கண்காட்சியே
ஓசையில் உன் ஆட்சியே

இத்தனை கொண்டாவள்
இருளிலும் ஒளியானவள்

தன் ஆட்சி புரிபவள், என்
பட்டாம்பூச்சி ஆனவள் !
நிலையாமை மட்டுமே
நிலையாக நிற்குதே
நிலையற்ற வாழ்விலே
நினைவுகள் சொட்டுதே

அறியாமை வென்றொரு
கடிவாளம் கட்டுதே
அறிவென்னும் மொட்டுக்கள்
அதற்குள்ளே கெட்டதே

நெருங்காமை அன்றெனில்
நேராமை இருந்திடில்
உறங்காமை உயராமை
தளராமல் வென்றிடும்

சொல்லாமை வெல்லாமை
துணியாமை போயினில்
நல்லாமை வல்லாமை
வளராமை போயிடும்

கல்லாமை கனியாமை
வெல்லாமை ஆனதில்
நில்லாமை நிகழாமை
நீடிக்காமை ஓடிடும்

துள்ளாமை துவளாமை
துடியாமை ஆகினில்
வெல்லாமை வெகிளாமை
செயலாமை இழந்திடும்

ஐய்யகோ ஐய்யகோ
எந்தனை ஆமைகள்
இத்தனை ஆமையில்
செத்தவை யாவைகள் ?
குழப்படியாய் நான் இருந்தும்
குளறுபடிகள் செய்ததில்லை
அடுப்படியில் நீத்துப் பெட்டி
அழுவதென்று சொல்வதினால்
மடைப்பள்ளி மோதகம் தான்
மனமுவர்ந்து ஏற்றிடுமோ..?

விளை நிலத்தில் விசம் கலந்து
விளைச்சல்களை பெருக்குவதால்
உலை கொதிக்கும் என்று சொன்ன
உத்தமரே இந்த உலகினில் ஞானி
விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு
விழிப்புணர்வு கொடுக்கும் விஞ்ஞானி

அத்திப்பழமும் ஆலம்பழமும்
முத்திப்பழுத்தால் முழுதும் வீணி
சித்தப்பனும் பெரியப்பனும்
செத்துபோனால் சொத்துப்பங்காளி
போத்திப் படுத்த அம்மா சேலை
விட்டுப் போனால் அதுவும் காலி

புத்தி கெட்ட மனிதர்களின் இத்துப்
போன உணர்வைக் கண்டு, செத்துப்
போகுதே என் ஆவி, அதை கொஞ்சம்
ஏனும் ஒத்திவைக்க முயற்சி செய்தும்
பொத்திவைக்க முடியாது, தினம் தினம்
பித்துப்பிடித்தாடும் மனங்கள் பலகோடி !


நேரம் வந்து செல்லும் போது
நெஞ்சை அள்ளிக் கொள்கிறாய்
வேண்டாம் வேண்டாம் என்று
சொல்லி வேதனையில் வாடுறாய்

கொஞ்சம் பொறு(த்)திருடி ஓடிவந்து
கொத்திக் கொண்டு செல்கிறேன்
கொத்தி எடுத்த முத்தை கோர்த்து
மார்பில் மாலையாகச் சூடுறேன் !
உருப்படியாய் ஏதும் ஒன்று
எழுதட்டுமா கவிதை என்று

வெளிப்படையாய் ஏதும் சொல்லி
நான் வாங்கட்டுமா திட்டு நன்கு

அகம் படியார் கதையில் ஒன்று
அவிழ்த்துவிடவா நானும் இன்று

விதிப்படிதான் நடக்கும் என்றால்
விழிகள் மூன்றும் எதற்கு உண்டு

பிழைப்பதற்கே வாழ்க்கை என்று
பிழை கணக்கில் வேட்கை இன்று

தடுப்பதற்கு வழிகள் இருந்தும்
கெடுப்பதற்கே நாட்டம் உண்டு

பல விலைமாதர் வெற்றிடத்தை
சில குலமாதர் நிரப்பக் கண்டு

நடனமாடும் சடலங்கள் போலே
நடமாடும் ஆடவர்களும் உண்டு

இடைக்கிடையே தடம் புரளும்
இடையிழந்த இறைவிகள் கண்டு

ஆத்தாடி ஆத்தாடி யாருக்குத் தான்
சொல்லி அழ, கூத்தாடி கூட்டத்தில்
நான் பறக்கும் காத்தாடி ஆனகதை... ?

தேவாங்கின் தென்மாங்கில்
தேனமுதம் சிந்தக்கண்டு
பூவிலங்கு போடவந்த
செவியிழந்த நாரையொன்று
தேவாரம் பாடுதென்று
தெருப்போக்கன் செய்திகேட்டு

செருப்பணிந்த காலோடு
சேத்துக்குள்ளே நாத்துநட
பாத்திருந்த ஆட்காட்டி
அழுதழுது அடைகாக்க
நேந்து விட்ட ஆடு ஒன்று
நெஞ்சினிலே குத்திடவே

சாரைப்பாம்பு கண்கலங்கி
சருகுக்குள்ளே புகுந்ததென்று
சட்டையிலே பொத்தானில்லா
சாமக்கோழி படையலென்று
சந்தனக் குவளைக்குள்ளே
சர்ப்பம் ஒன்று உமிழ்ந்ததினால்

கர்ப்பம் தரிந்திருந்த
கவுதாரி கருக்கலைந்து
அற்ப சொற்பத்திற்கு
அடிபடிந்து போனதினால்
புத்தகத்தை மூடித்துவைத்து
ஒத்தையிலே சித்தமானான் !

பொதுவாக ஒன்று எழுதிடச் சொன்னாய்
பொறுப்போடு மெல்ல எழுதிட வந்தேன்
பொருளாக எதையோ எண்ணிய போதும்
பொதுவிலும் நீயே கருவென வந்தாய்
போக்கணம் கெட்டவளே நானென்ன செய்ய ?

கருக்கிராள் உருக்கிறாள்
கண்டபடி கவிழ்க்கிறாள்
சிரிக்கிறாள் சிணுங்கிறாள்
சீர்வரிசை நீட்டுகிறாள்

கிறுக்கிறாள் செருக்கிறாள்
கிறங்கடிச்சு மிளிர்கிறாள்
குனியிறாள் கூனுறாள்
குழிக்குள்ளே தள்ளுறாள்

நெளிக்கிறாள் சுளிக்கிறாள்
நேர்வழியை மாற்றுறாள்
தழுவுறாள் தாங்கிறாள்
தன்வசப் படுத்துறாள்

கொதிக்கிறாள் வெறிக்கிறாள்
வெல்லம் தின்ன சொல்லுறாள்
கடிக்கிறாள் ருசிக்கிறாள்
கபடி ஆடிக் கலக்கிறாள்

துடிக்கிறாள் மடிக்கிறாள்
தூண்டில் போட்டிழுக்கிறாள்
நடிக்கிறாள் நகைக்கிறாள்
நாதஸ்வரம் ஊதுறாள்

கத்துகிறேன் கதறுகிறேன்
கள்ளி கேட்கவில்லையே
கற்றவித்தை முற்றும் நாட்டி
கதை முடிக்க பார்க்கிறாள்

மயங்கினேன் மடிந்தேன்
மடியில் தான் விழுந்தேன்
சுவைத்தேன் மலைத்தேன்
சொக்கிபோய் கிடந்தேன்

எழுந்தேன் தொடர்ந்தேன்
பாற்கடலில் நனைந்தேன்
பரவசத்தில் மிதந்தேன்
பன்னீரைத் தெளித்தேன்

காதில் ஏதோ சொல்ல சொல்ல
கண் விழித்துப் பார்க்கிறேன்
ஐயோ..ஊத்தப்பம் ஊட்டி எனை
ஊத்தைப்பொடியன் ஆக்கினாளே !

கதை இரண்டு சொல்லவா
காதை கொஞ்சம் கொண்டுவா
கூட்டிக் கழித்து சொல்லவா
கூவும் குயிலே கிட்டவா

ஏதேனும் சொல்லட்டுமா
என்னென்று சொல்லட்டுமா
ஏன் என்று சொல்லட்டுமா
எதுவென்று சொல்லட்டுமா

தலைகோதிச் சொல்லட்டுமா
தலை கீழாய் சொல்லட்டுமா
தடுமாறிச் சொல்லட்டுமா
தடம் புரளாச் சொல்லட்டுமா

புலிவாலை பிடிக்கட்டுமா
புரியாமல் எடுக்கட்டுமா
சரி பாதி கொடுக்கட்டுமா
மதி மீறி தொடங்கட்டுமா

அடியோடு அள்ளட்டுமா
பிடியாணை நீட்டட்டுமா
வேரோடு பிடுங்கட்டுமா
வெள்ளோட்டம் பார்க்கட்டுமா

ஊர்குருவி ஆகட்டுமா
உலைவாயை மூடட்டுமா
பெயர் சொல்லி காட்டட்டுமா
பேசாமல் இருக்கட்டுமா

நார் நாராய் கிழிக்கட்டுமா
நாய் வாலை நிமித்தட்டுமா
போர் வாளை வீசட்டுமா
பொய் வேரை அறுக்கட்டுமா

ஏதேதோ சொல்ல வந்து
எது எதுவோ சொல்லிவிட்டு
சொல்லவந்த விடயத்தை
சொல்லாமல் செல்கின்றேனே !
இடைவெளி முளைத்ததாய்
எண்ணிக்கொண்டு
புது முகவரி நீட்டுறாய்
கண்ணுக்குள்ளே

விழிவழி புகுந்தவள்
நெஞ்சுக்குள்ளே
முழுமதியென மின்னுறாள்
உள்ளுக்குள்ளே

வளர்பிறை வாழும் என்
உயிருக்குள்ளே
புது தேய்பிறை புகுருமோ
உள்ளத்துக்குள்ளே

சதி வலை பின்னி ஏன்
கவி எழுதி,.. எனை
சாய்த்திடப் பார்க்கிறாய்
நோடாலச்சதிர் ஆடி

உண்மையை சொல்கிறேன்
ஓடிவிடு,.. இல்லை
உபத்திரம் கொடுக்காமல்
ஆளைவிடு

தரித்திரம் பிடிக்க முன்
மாறிவிடு, ..இல்லை
நான் தடுத்தும் நீ தந்தால்
தறுதலையாவேன் காலைவிடு

எங்கள் இடைவெளி குறைந்தது
இப்போது இனி இடஞ்சல்கள்
கொடுக்காதே எப்போதும், பின்
தலைகீழ் ஆகிடும் உன் கோடு !
கட்டித் தொழுதும் கடவுளை
பின் கண்களில் எதற்கிந்த
நீர்த்துளி

புதுப் பட்டுத் துணிகளை
சாத்தியும் பட்டினி தீர்ந்தாதா
வாழ்வினில்

குட்டிக் கரணங்கள் போட்டும்
ஏன் குற்றங்கள் குறைவில்லை
நாட்டினில்

திட்டித்திட்டிதான் வாழ்கின்றாய்
பின் தீண்டாமை தீபத்தை ஏனோ
ஏற்றுறாய்

கட்டித்தழுவித் தான் வாழ்ந்துபார்
பின் உனை தொட்டு வணங்கித்தான்
வாழ்த்துவார்

பக்கம் வரவே பக்கம் வரவே மயக்கம்
நீ என் பக்கம் வந்த பின்பு என்னதான்
நடக்கும்

அக்கம் பக்கம் சுற்றம் சூழல் தடுக்கும்
அந்தக் கட்டளையும் மீறி யன்னல்கள்
திறக்கும்

விட்ட குறை தொட்ட குறை தொடரும்
நம் விந்தைகளால் செவ்வண்ண மொட்டு
மலரும்

சட்டம் திட்டம் வட்டம் போட்டு அடக்கும்
அதை வெட்டுக்கிளி வெட்டி தட்டி தத்தி
பறக்கும்

மிச்சம் மீதி சொல்ல கொஞ்சம் தயக்கம்
நான் அத்தனையும் சொல்லி விட்டால் ..
பிழைக்கும் !

நகைச்சுவை என்பது
நாசுவையல்ல
நகைப்புக்குரியது
நகைச்சுவையுமல்ல

நற்சுவை நயச்சுவை
நாசுவையோடு
நயம்புதல் என்பதே
நற்சுவையாகும்

பொற் சுவை பொருட்சுவை
பொலிவற்ற பொறுப்பினை
கற்றவை கசந்தவை, ஏன்
கைகால் முளைத்தவை

இத்துனை எத்துணை
ஏய்த்துப் பிழைப்பவை
அத்துனை இயம்பிலும்
எத்தனை சொற்பிழை

கற்பனை ஒப்பனை
காற்றில் மிதப்பவை
சொப்பனம் ஒன்றிலே
சொர்க்கத்தை காண்பவை

கற்பினை நட்பினை
கசக்கி எறிந்தவை
சப்பி உமிழ்ந்து காறித்
துப்பிய சக்கைகள்

விக்கி விழுங்கி
வீண்பழி சொல்பவர்
கொக்கிக் கொழுவி
குரல்வளை நசிப்பவர்

தப்பித் தவறி தனித்துவம்
பூண்டு எட்டிப் பிடித்து
ஏறிட முனைந்தால் குத்தி
குதறி குருதியைக் குடிப்பார் !

பாசமும் நேசமும்
பல கதை கூற
பாவிகள் நெஞ்சினில்
கடும்விசம் ஊற

ஆதியும் அந்தமும்
அடிபணிந்தாட
ஆயிரம் ஆசைகள்
அவதியில் வாட

கூடிய கைகளும்
கொடுங்கோளாக
நாடிய நெஞ்சமும்
தீயினில் வேக

சூடிய மல்லிகை
வாடியே காய
தேடிய செல்வங்கள்
ஓடியே போக

இக்கரை அக்கரை
இச்சையில் மூழ்க
சக்கரை பந்தலில்
சாக்கடை நாற

விற்பவர் பெற்றவர்
விலை நிலை ஏற
வில்லினில் பாம்பினை
வித்தகர் ஏவ

தப்பினில் உப்பினை
அகப்பையில் ஏந்த
தவறியே வழிகளில்
தாமரை பூக்க

செப்பிய சொற்களில்
செதில் படர்ந்தோட
செவிகளில் தேளினம்
செந்தமிழ் ஓத

மாமனும் மாமியும்
மாமிசம் சமைத்து
மாப்பிள்ளை உண்டிட
மருமகள் அழைப்பு !

நான் ஒரு பாதி நீ ஒரு பாதி
கவியும் கதையும் எழுதிடவா
இதில் இரு பாதிகள் சேர்ந்து
ஒரு சோடி நாம் என்றிடவா

ஆயிரம் கனவுகளுடன்
பேசிய விழிகள் நான்கும்
பேச்சின்றி தொலைந்து
அரங்கேறிய இந்நாளில்

மண்மீது ஒரு விழி
விண்மீது மறு விழி
கைபேசி மொழி வழி
காற்றில் கலந்த பொன்னாளே

கருவறை வாசத்தின் முகரல்
மறுமுறை உன்னில் தேடி
சிலிர்த்துப் போக அன்று
முடிவு கொண்டதும் இந்நாளில்

கருவறை உனது ஆயினும்
அங்கே துடித்தது எனது உயிர்
சிலிர்த்தது மேனியல்ல என்
சுவாசத்தின் இதய ஒலியே

ஆசை தெரிவுகளில் அன்று
ஆடைகள் கொண்டுவந்தாய்
ஆர் என்று தெரியாத எனக்கு
அப்படியே பொருந்தும் படி

கண்களில் கைது செய்திருப்பில்
ஆடைககள் அளவின்றிப்போகலாம்
இதயத்துக்குள் கருவுற்றதால்
அணிந்து பார்த்து அள்ளி வந்தேன்

பயணத்தின் தொடக்கத்தில்
பாதி கதை நீ சொன்னாய்
மீதி கதை நான் சொல்ல முன்
வானம் தாண்டி நீ வந்தாய்

கதை சொன்ன கருவிழியை
கண் தேடி அலைய முன்னே
கால்கள் ஓடி கைபிடித்திட
காலம் கனிந்த பொன்னாளே

கண்டங்கள் பிரிந்த கோட்டை
காதலுடன் தாண்டி ஓடி வர
கங்கணம் கட்டிய
என் பாசக் காவலனே

கண்டம் தாண்டியது என்
உடல் மட்டுமே தவிர
என் உயிர் உன்னிடத்தில்
தானே என் கொள்ளைக்காரியே

உன்னை சேரும் நாள் எண்ணி
உறக்கம் தொலைத்த இந்நாளில்
காணத் துடித்தேன் கண்ணா
கனவிலும் உன் வருகை வேண்டி

எனை சேர உறக்கம் தொலைக்க
உன்னை தேடி உன்னிடத்தில்
உலகை மறந்து ஓராயிரம்
கனவு சுமந்தது இப்பொன்னாளே

உலகம் மறந்து உயிர் மறந்து
ஊர் திறந்து உற்றார் திறந்து
உன்னோடு பேசிக் கொண்டு
வரவுக்காக காத்துருந்ததும்
இந் நாளில்.....

உலகை நீயோ மறந்தாய்
நானோ உயிரை தொடர
அனைத்தையும் துறந்து
ஆயத்தம் ஆன பொன்னாளே

உன்னிடத்தில் உறைந்த நிமிடங்கள்
உரையாற்றுகிறது உணர்வுகளோடு
உடலினிலே ஊற்றியது பாசம் என்
உயிரில் படர்ந்து சுவாசம் கலந்து
வாசம் வீசுயது இந்நாளில்

காலங்கள் ஓடியது அதில்
கற்பனைகள் பொங்கியது
காலடி வரும் வரைக்கும்
பல யுகம் தெரிந்தது கொடுநாளே

மணித்துளிகள் நாளாக
நாள் ஒன்றும் யுகமாக
நான் சுமந்த மழலைதனை
தோள் சாய்க்க துடித்ததும்
இப்பொன்னாளே

கவனம் கவனமென்று
காரியத்தில் கண்ணாயிருந்து
என் கருவாச்சிக்கு கதை
சொல்லி நான் கருக்கலைந்ததும்
இப் பொன்னாளிலே

இதில் உன் பாதி எதுவென்றும்
என்மீதி இதுவென்றும் யார்தான்
புரிந்து கொள்வார் அப்படி புரிந்தால்
நம் ஜாதி புரிந்து கவிகூட இனித்திடும் !

திருகுதாள மேடையிலே
ஆதிதாள அப்பலங்கள்
அந்தரங்க நாடகத்தில்
பித்தலாட்டம் அரங்கேற்றம்

இன்னுயிரை பிழிந்தெடுத்து
செந்நீரில் விளக்கேற்றல்
காட்சி பார்க்கும் கண்களுக்கு
கண்ணியங்கள் கைமாற்றம்

சூட்சுமங்கள் நாற்றத்திலே
சூதாட்ட வைபவங்கள்
வாழ்த்துரையும் நயப்புரையும்
வாய்மையற்ற விரிவாக்கம்

ஆய்வுரையை அலங்கரிக்க
பேய்களுடன் சேர்மானம்
பொய்யுரையும் மெய்யுரையும்
பொச்சுமட்டை தணலாட்டம்

நாடகத்தின் முடிவினிலே
அலகுபாச்சி அழகுபார்த்தல்
கைநழுவி முள்விழுந்து
நெஞ்சினிலே பெரும்கீறல்

வடு ஆற்ற மருந்து போடும்
வைத்தியர்கள் திண்டாட்டம்
வந்தவரை வழியனுப்பி
வலிசுமக்கும் ஒரு ஓடம் !

அன்பின் அருமை புரியாதவர்களும்
அதன் ஆழம் தெரியாதவர்களும்
ஆயிரம் சொந்தங்கள் நட்சத்திரங்களாய்
சூழ்ந்திருந்தாலும் அனாதைகளே

உணர்வுகள் இல்லாததுகளை கூட
உணர்ச்சி பொங்கப் பேசி உணர பண்ணி
உருப்பட வைக்கலாம்......

ஆனால் சூடு சூரனை வெட்கம் ரோசம்
உண்மை நேர்மை எதுவுமே இல்லாததுகளை
எப்படித்தான் உயிர்ப்பிக்க முடியும் ?

ஏளனம் செய்யும் எழியோரைக் கண்டு
இதயச் சாரளம் பூட்டித் தள்ளி நீ நில்லு
காரணம் பூரணம் ஆனதன் பின்னே
காரியம் நடத்தி கைவீசிச் செல்லு

நிற்பதும் நடப்பதும் நிழலறியும் நிம்மதி
எதுவென நிஜமறியும் கற்றவை யாவதும்
நிற்பதில்லை நிற்பவை யாவதும் கற்றதில்லை..!

சீர்படுத்திப் பார்த்திட முடியா
சிங்கார நிலாச் சிட்டவள்

சிணுங்கலிலும் அனுங்கலிலும்
திணரவைக்கும் கட்டுடல்

கருவிழியால் கைது செய்த
பொற்கால மொட்டவள்

செவிவழியால் கவிமொழியால்
திருவடிவாய் நின்றவள்

மறுதலித்து மனமுடைக்கா
மாயலீலை கொண்டவள்

தலையணைக்கு மடி அமைத்து
மயில் இறகு தந்தவள்

ஒர் உயிராய் என் உயிரை
ஒருங்கிணைத்து கொன்றவள்

பால் குடிக்கும் மழலையாகி
என் உயிரைக் குடித்தவள்

பகல் இரவாய் பாடு பட்டுப்
பட்டாம்பூச்சி ஆனவள்

இவள் இருக்க என்னவென்று
இலக்கணமாய் திகழ்ந்தவள்

எப்பொழுதும் இவளைபோல
ஒளிகொடுக்கத் தான் எவள் ?

முறுக்கெடுத்து கருத்துரைத்தால்
சறுக்குவது வார்த்தைகள் மட்டும்
அல்ல வாழ்க்கையும் தான்

மேம்பட்டு மெய்யுரைத்தால்
மெய்சிலிர்ப்பது மேனி மட்டும்
இல்லை மேன்மையும் தான்

பிடிப்பதை சுவைப்பதற்கும்
சுவைப்பது பிடிப்பதற்கும்
தடுத்திடும் நற்குணம் வேண்டும்

கிடைத்ததை எடுப்பதற்கும் எடுத்ததை
ருசிப்பதற்கும் இணங்கினால்
பெண்மையின் குணம் மாறும்

இருப்பதை இழந்துவிட்டு இல்லாததை
இருப்பில் கொண்டு இணங்கினால்
இசைந்தால் இதயம் கல்லு

பிறந்ததின் பயனை நல்கி பயனினில்
பிறப்பை எண்ணி பிறப்பினை
பத்திரப்படுத்திக்கொள்ளு

பூட்டுக்கள் திறந்திருந்தால் புதையல்கள்
திருடப்படும் திருடனே திரு ஆனால்
தெருக்களில் துர்நாற்றம் வீசும்

கூட்டத்தில் நின்றாலும் கொடும்
சொல் தலைசீவும் குலமகள் நிறம்
மாறி விலை பேசும் நிலையாகும் !
ஸ்கூட்டியிலே கடத்திச் சென்று
கூடவே அமர்த்தி வைத்து
புத்திக் கூர்மை கொண்டு கத்தி
விழிகளாலே நெஞ்சில் குத்திக்
கிறிக்கி புலம்பியது நினைவிருக்கோ

தொட்டு அழுதபோது கட்டி உனை
அணைத்து விட்டுத் தள்ளென்று
ஒட்டி உறவாடி மூச்சை களவாடி
கடலழகை ரசித்த கதை கண்ணே
உனகின்னும் நினைவிருக்கோ

அலையில்லாக் கடரோரம் அலை
பாய்ந்த மனதோடு வலைவீசும்
முதியோரை கலையோடு படம்பிடித்து
விளையாடி மகிழ்ந்தகதை விழிக்குள்
இன்னும் கலையாது நினைவிருக்கோ

வீசாத காற்றொன்று வீசுவதாய் தான்
சொல்லி துப்பட்ட பறக்குதென்று
அப்பட்ட பொய்பேசி தப்பாட்டம் ஆடிடவே
வெட்கத்தில் தலைகூனி வெப்பத்தில்
கலையாடி மசிந்தியது நினைவிருக்கோ

கலவரம் முடிந்த பின் கைக்குள் எனை
அடக்கி கடை கடையாய் கூட்டிச்சென்று
கண்ணாடி அறைக்குள்ளே மேலாடை
அணிவித்து அழகுபார்த்து கன்னத்திலே
கவிவடித்த கதையேனும் நினைவிருக்கோ

பின்னாடி எனை அமர்த்தி சீரான வீதியிலே
சீரில்லை என சொல்லி படக் படக்கென்று
நிறுத்தி சடக் சடகென்று மோதவைத்து
கண்டாடி வழியாக கண்ணடித்து கதை
பேசி உயிரில் கலந்தது நினைவிருக்கோ

அடிபோடி இதிலேதும் நினைவிருந்தால்
எதற்காக இந்தநிலை, அதில் உனக்கேதும்
தொடர்பிருந்தால் மறுக்காமல் சொல்லிவிடு
இல்லை இல்லை அதற்காக மட்டும் என்றால்
எதை நீ மறந்தாலும் தப்ப்ப்ப்பே இல்லை !

கொடுமையிலும் கொடுமை
கோரப்புல்லின் வேர்போல்
வெட்ட வெட்ட தழைக்கும்
நீ வேர் அறுக்கும் வரைக்கும்

கரை வேட்டி கட்டி
கந்துவட்டி விதையை
உரம் போட்டு வளர்க்கும்
தரம் கெட்ட மனிதம்

பிழையெனத் தெரிந்தும்
பிழைப்பு நடத்தி
ஐடை பின்னி ஆடும்
தரித்திர உலகம்

விடையார் சொல்வார்
விழிநீர் துடைத்து
தடையார் இடுவார்
மடை திறக்க முன்னே

விதியென சொல்லி
வீழ்ந்து நீ போனால்
படைத்தவன் ஏனோ
பல்லிலிக்கத்தானோ??

சட்டங்கள் இருந்தும்
திட்டங்கள் இல்லை
வட்டங்கள் போடும்
வானரத் தொல்லை

பட்டங்கள் பதவிகள்
பலருக்கு இட்டது தப்போ
நட்டத்தில் முளைத்தது
கட்டளை இடவோ

பிஞ்சுக்குழந்தைகள்
நஞ்சு அருந்திடவோ
நெஞ்சைப் பொத்தி
இனியும் வருந்திடவோ

பஞ்சுத்தளிர்மேனி தீயில்
வெந்து கருகிடவோ
வஞ்சம் விதைப்போரை
கெஞ்சி அழுதிடவோ

தஞ்சம் ஒரு பாதி
பஞ்சம் மறு மீதி
கொன்று குவிக்கிறதே
வென்று கொழுக்கிறதே

இதை கண்டும் காணாது
நண்டு நகர்வதுபோல்
முதுகுத் தண்டு இல்லாது
தாண்டிச் செல்கின்றோமே !

தென்றலாய் தேகத்தில்
வெண்பனி பூசினாய்
திங்களாய் வந்து நீ
மாங்கனி ஊட்டினாய்

மங்கையாய் மழலையாய்
மார்பினை வருடினாய்
மன்மதக் கலையுடன்
மாமிசம் நீட்டினாய்

கண்டதும் உண்டதும்
தொண்டையில் நிக்குதே
வென்று நான் கொண்டது
மண்டையில் சிக்குதே

குன்றினில் இல்லாத
பூக்கன்று நீ அல்லவோ
கொன்று எனை தின்ற
பசுக் கன்றும் நீ அல்லவோ

மந்திரம் தந்திரம்
கொண்டவள் நீயடி
மங்கையின் சாயலில்
மன்மதத் தேரடி !
கோபப்பட்டுக் கோபப்பட்டு
இரத்தம் கொதிக்குதே,
அதை சுத்தரிக்க முன்னம்
நெஞ்சில் யுத்தம் வெடிக்குதே..

சத்தம்போட்டு சத்தம்போட்டு
சித்தம் கலையுதே, --இதை
கொக்கரிக்கும் நெஞ்சில்
ஏன்பின் பித்தம் தெளியுதே...

பத்தவைத்துப் பத்தவைத்து
பெரும் பழிசுமத்துதே,
நீ புத்தனுக்கு உறவு
என்று கொச்சைப்படுத்துதே

திட்டம் தீட்டி சட்டம் போட்டு
வண்ணக் கொடிபறக்குதே,
அதை எட்டி நின்று பார்த்த
கண்ணில் தீப்பிடிக்குதே

மொட்டத்தலையில் பட்டம் சூட்டி
மெல்லக் காய்நகற்றுதே
அங்கு வட்டம் போட்டு
குள்ளநரிகள் குடைவிரிக்குதே

நச்சுப்பாம்பு கூடி நின்று நடனமாடுதே
இதை நன்மை என்று வழிமொழிந்து
அண்ட(ங்)ம் காக்(க)கா வடைசுடுகுதே

அதையும் இதையும் சொல்லமுன்னே
தெருநாய் குரைக்குதே,
போதும் விடு வேண்டாம்
இனி வாயுளையுமே !

ஊத்தை பொடியன்டா நீ
ஊத்தை பொடியன்டா நீ
என்று சாட்டுப் போக்கா
சேட்டை பண்ணுறாளே

நாரத்தங்காய் கன்னம் மின்ன
ஊமத்தங்காய் நெஞ்சை அள்ள
ஏலக்காய் வாசம்கொண்டு முந்திரி
மூக்காலே மந்திரிச்சு போறாளே

வெண்டைக்காய் விரலழகி
விழி வித்தைக் கண்ணழகி
முல்லைப்பூ பல்லழகி, என்
முன்னாடி நீ உலகழகி

ஆலம்பழ உதட்டாலே
அச்சடிக்க பார்ப்பவளே,
அச்சடிக்க முன்னாலே
பொச்சடிக்க வைப்பவளே

தந்தைக்கு உபதேசம் செய்த
தகப்பன் சுவாமி போல், எனை
நங்கைக்கு நயமுரைக்கும்
நாயகனாக்கியவளே

உச்சாரம் ஏற்றிவிட்டு அச்சாரம்
கேட்பவளே, பெரும் செய்கூலி
எனக்கெதற்கு,. சிறு சேதாரம்
தான் உனக்கிருக்கு

உள்ளத்தினுள் ஏதோ ஒன்று
உருக்குலைந்து கிடக்குதடி
உள்ளுக்குள்ளே நீபுகுந்து பரிகாரம்
செய்யேனடி பரியாரி நீயாகி..!!!

இரவுப்பயணம் இணைந்த இதயங்கள்
இறுகப்பற்றிய இரண்டு உள்ளங்கள்
தொடர்ந்த உறவில் மறந்தது உலகை
அச்சம் பாதி உச்சம் மீதி எல்லைகள் பல
தொல்லைகள் இருந்தும் முல்லைகள் பூத்தது

காதுகளில் ஓசைகள் கர்ப்பம் தரித்திட
கண்களின் மொழிகள் களம் அமைத்திட
கைவிரல் பத்தும் ஒத்து உழைத்திட
மூச்சுக்காற்றில் முகங்கள் சிவந்திட
முந்தானை வாசத்தில் பேச்சு திணறிட

செவிவழி செய்திகள் சொல்லிட
செவ்விதழ் செயல்களில் தள்ளிட
அதன் படி சாவிகள் நெய்திட
அனைத்திலும் அமுதம் பொங்கிட
செழிப்பில் விழிகள் விரிந்திட

பாசம் பொங்கி மோசம் தொடர்ந்திட
நாசம் இன்றி மோட்ஷம் அடைந்திட
ஒருவாய் உணவை இருவாய் உண்டிட
தருவாய் இனியும் சுகமே என்றிட
பாதிப் பயணம் பசுமையாய் முடிந்திட

மீதிப்பயணம் எதுவரை தொடர்ந்தது
மிச்சக்கதையில் எதுதான் நடந்தது
பச்சைப் பிள்ளை பாலிற்கு அழுதது
இச்சை தீர்ந்ததும் ஏறி மிதித்தது
உச்சம் தலையில் ஓங்கி அறைந்தது

துச்சமாய் எண்ணி துள்ளிக்குதித்தது
முச்சை அறுந்து முகத்திரை கிழிந்தது
கச்சை அவிழ்ந்து காற்றில் பறந்தது
பிச்சுத் தின்றிட பேய்கள் தொடர்ந்தது
நச்சென்றிருந்தது நாசமாய் போனது

சொச்சம் சொல்ல மூளை மழுங்குது
சொல்லாவிட்டால் உள்ளம் விம்முது
சொல்ல முன்னே உதடுகள் நடுங்குது
சொல்லச் சொல்ல கண்கள் கலங்குது
சொல்லி விட்டால் எல்லாம்................!?
மாலை வேளை மலையோரச் சோலை
சாலை மேலே இரு கை கோர்த்த வேளை
கதைபல பேசி தன் நிலைதனை மறந்து
மெல்லிய தென்றல் மேனியைத் தழுவ
புல்வெளிமேலே பூத்தன இரு மலர்கள்

கண்ணிலும் நெஞ்சிலும் கவிதைகள் மிதக்க
கார்முகில் கூந்தலை கைவிரல் துளைக்க
மானிட வாழ்வினில் வானவில் கலக்க
மொழிகள் தொலைந்து விழிகள் புலம்ப

படர்ந்த கொடிகள் இறக்கை முளைத்து
பறந்து சென்றன விரதம் முடிக்க ,.. அட
வாடைக் குளிரோ வாட்டி வதைத்திட
போகும் வழியினில் தேனீர் அருந்திட
தேனி இரண்டுமே தேடி அலைந்திட

மாலை உணவினை மாற்றி ஊட்டிட
வயிறு நிறைந்தும் மறுக்க மறந்திட
மனசு குளிர்ந்து மார்பில் சாய்ந்திட
பயணம் தொடங்கின பாதை இனித்திட

கண்ணாடி முன்னாடி பின்னாடி
நின்றது மனக் கண்ணில்த் தெரியுதே
கள்ளிச் செடியினில் முள்ளில் எழுதிய
கதை கொள்ளி வைக்குதே உள்ளம்
பள்ளிகொள்ளையிலும் துள்ளி எழுகுதே !
 —

உனக்கும் உன்னை கட்டியவனுக்கும்
அவ்வளவு பெரிய வேறுபாடு ஒன்றும்
கிடையாது, ஏன் என்று கேட்கிறாயா ?

அன்று நீ பூத்துக் குலுங்கும்போது அள்ளி
முத்தமிட்டு அணைத்துக்கொண்டவன்
சலித்துப் போனதும் வெட்டி விட்டான்

இன்று உன் தனிமையை போக்க இரவும்
பகலும் இணைந்து கொடுத்த என்னை
சாயம் போனதும் தள்ளிவைத்துவிட்டாய்
ஓ.... நான் யார் என்று கேட்கிறாயா ..???

இங்கனம் என்றும் உன் வியர்வை வாசம்
மறவாத கிளிந்து போனதும் நீ தூக்கிவீசிய
உன் மோகத்தில் நனைந்த தலையணை!
தேகம் தீண்டும் தென்றல் போலே
தேடி வந்த சொந்தம் நீ

தாகம் தீரும் அன்பு தந்து எனை
தாலாட்டும் தாயும் நீ

வானம் பூமி வாழ்த்தி நிற்கும்
வானவில் குட்டி நீ

காலை மாலை கவிசமைக்கும்,
என் கவிதை பூங்கா மொட்டு நீ

கண்ணில் ஒத்தி நெஞ்சில் பொத்தி
உயிர் கலந்த உயிரும் நீ

எந்த பந்தம் என்றறியா வந்து
சேர்ந்த சொந்தம் நீ

பிஞ்சு பஞ்சு மொழி சிந்தி
நெஞ்சினிக்கும் குஞ்சு நீ

வஞ்சம் இல்ல நெஞ்சணையில்
எனை கைதி செய்தாய் ஏனடி.?
மனிதனாய் இருந்தேன் மதிக்கவில்லை
புனிதனாய் முயன்றேன் முடியவில்லை
புருசோத்தமனாய் நடந்தேன் பிடிக்கவில்லை
வாசுதேவனாய் திகழ்ந்தேன் புரியவில்லை
நரசிம்மனாய் ஆகவும் விருப்பமில்லை
கண்ணனாய் இருக்க முடிவெடுத்தேன்
இனி கண்டவர் நெஞ்சிலும் குடியிருப்பேன்
எல்லாம் இருக்கின்றது உள்ளுக்குள்ளே
இனி எடுத்து விடுறேன் கண்ணுக்குள்ளே
படர்ந்தால் பறப்பேன் விண்ணுக்குள்ளே
தொடர்ந்தால் வாழ்வேன் நெஞ்சுக்குளே
வீழ்ந்தால் புதைவேன் மண்ணுக்குள்ளே
இங்கே ஏதும் எதுவுமில்லை என்ற பின்னே
இனி எதுதான் என் எல்லை ...................???

நான் யார் என்று எனக்குத் தெரிந்தும் என்னை நானே
யார் எனக் கேட்டேன் நீதான் அவன் என்று நானே
சொல்ல அவன்தானே நான் என தெரிந்து கொண்டு
எனது பாதையில் நடந்து சென்றேன்..

ஆனால் நால்புறமும் நால்வகைப் பேச்சு
நீ அவன் இல்லை இவன்தான் நீ என்றது
ஒருபுறம் இல்லவே இல்லை அவனும்
நீ இல்லை இவனும் நீ இல்லை எவன் தான்
என்று எதுவும் மெய் இல்லை என்றது
மறுபுறம்..

அப்போ நான் யார் தான் என்று எனக்குள்
கேட்டால் ... அட போடா நீ தான் அவன்
என்று உள்ளம் சொன்னது

இதனைக் கேட்டு என்னைத் தேடி எங்கும்
அலைந்தேன் எதுவும் இல்லை, அதனால்
கொஞ்சம் குழம்பிப்போனேன் இதனால்
என்னை அறிந்தோர் யாரோ அவரை நாடி
ஓடி வந்தேன்,

உண்மை சொல்ல ஆசைப் பட்டால் உள்ளபடி
 சொல்வதென்றால் என்னை அறிந்து புரிந்தோர்களே
என்னை எனக்கு காண்பிப்பீரோ அவனா இவனா
எவனா என்று எடுத்துக்கொஞ்சம் உரைப்பீர்களோ ?

என் உண்மை முகம் தெரியவேண்டும் என்
உள்ளம் என்ன அறியவேண்டும், நியாயம்
நேர்மை தவறவேண்டாம் என் நலத்தில் கூடக்
கவனம் வேண்டாம் முகத்துதிகள் விட்டெறிந்து
உணர்வைக் கொஞ்சம் தொட்டெடுத்து

என் உண்மை முகம் எதுதான் என்று எனக்கு
கொஞ்சம் புரியவைத்து உங்கள் பார்வையில்
நான் யார் தான் என்று உள்ளதை உள்ளபடி
ஒப்பிப்பீரோ ?

அடிப்படை உணர்வுகளை
அடியோடு வெறுக்கிறேன்
வெளிப்படை இல்லாத
விடிவைத்தேடி அலைகிறேன்

சிவனடி பாதங்கள் தொட்டவன்
நான் இல்லை....... சிந்தையில்
வைத்ததால் சீரற்று நடிக்கிறேன்

பனித்துளி பருகிடும் எறும்பு போல்
நான் சுவையாய் போனேன் தாமரை
குளத்தினில் தவளைகள் வாயில்

உருவங்கள் இல்லாத உவமைகள்
சுமக்கின்றேன் பருவங்கள் அற்ற
காலனை அழைக்கின்றேன்

பொழுது போக்கும் சித்திரமாய்
பல விசித்திரங்கள் நடக்கின்றது
பொம்மலாட்ட மேடையிலே, சில
பித்தலாட்டங்கள் கலைகின்றது !

சிரிப்பு வருது சிரிப்பு வருது
நினைக்க நினைக்க சிரிப்பு
வருது எதற்கு வருது ஏன்
தான் வருது எண்ணிப் பார்க்க
பிழைப்பு கெடுது

களைத்து இழைத்து மூச்சு
வருது கண்ணில் கொஞ்சம்
நீரும் வருது அதற்கா இதற்கா
ஏன் தான் வருது எதற்கு எனக்கு
மூளை சுடுது

பேசப் பேசப் வார்த்தை வருது
வந்த வார்த்தை எதனை தொடுது
சொந்த வாழ்வை அதனா தருது
நல்லாய் தானே பேச்சும் வருது
பின்ன ஏனோ சோர்வு விழுது

கொஞ்சம் கொஞ்சம் ஞானம்
வருது கொஞ்சும் நெஞ்சில்
வேசம் உறுழுது மஞ்சம் வந்தும்
வஞ்சம் வளருது நஞ்சு குடித்து
நெஞ்சு உளறுது

சொல்லச் சொல்லக் கோபம்
வருது சொல்லாவிட்டால்
ரோசம் வருது ஒன்றும் இல்லை
என்று சொன்னால் ஏந்தான் எந்தன்
மனசு அழுகுது

எழுத எழுத எல்லாம் வருது
எழுதிவிட்டால் அதுவும் தவறு
கண்ணா பின்னா கதைகள் கேட்டு
கண்டபடி தமிழும் வருது உள்ளபடி
சொல்லப் போனால் உலகை விட
உண்மை அழகு

உண்மை ஒன்று சொல்லட்டுமா
ஊமை இராகம் பாடட்டுமா நல்லாய்
வாழ்ந்தால் போதுமென்று நாதசுரம்
ஊதட்டுமா இல்லை என்று சொல்லும்
வாய்க்கு இல்லாமல் தான் போகட்டுமா

மாறும் மாறும் என்றினைத்த நிலை
மாறாக் கதை சொல்லட்டுமா
இனி மாறித் தான் வந்தாலும்
மனம் ஏறக் கதை சொல்லட்டுமா
அல்ல மாறாய் கதை சொல்லட்டுமா

ஏதோ கதை சொல்லவந்து இப்போ
நான் என்ன கதை சொல்லுகிறேன்
அட அந்தக் கதை சொல்லவந்தால்
என் சொந்தக்கதை என்பாரே அப்போ
இந்தகைதை போதும் இனி எந்தக்
கதையும் வேண்டாமே !


இது மதங்களின் வேதமா
சாத்தான்களின் நாதமா
மாட்டிலே மயிர் பிடிங்கினால்
மிருகவதை
நாட்டிலே சிலை உடைத்தால்
அதிரும் நிலை
உலகெல்லாம் உயிர் காக்க
உயர்தலைமை
ஆனால் மனிதனை அழிக்கிறதா
மனிதத்தன்மை
எல்லாம் காக்க எல்லாம் இருந்தும்
இங்கே என்ன நிலை
எத்தனை காப்பகங்கள் இருந்தும்
ஏன் இவ்வளவு கொலை
யாரும் கேட்க முடியாட்டி எதற்கு
இப்படி ஒரு முறை
பச்சைக்குழந்தைகள் பதறும் தாய்கள்
இச்சை தீர்க்கும் நாய்கள்
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே
இருக்கும் பேய்கள்
யாரைக் கேட்க யாருக்குச் சொல்ல
ஈனப்பிறப்புக்களின் இன அழிப்பை
மனித உரிமைகள் எதற்கு இங்கே
நாற்காலிகள்போட்டு நாட்டியம்
பார்க்கவா.. இல்லை
நலிந்தோரை பார்த்து எள்ளி நகைக்கவா ?
அதைக் காக்க இதைக் காக்க என்று
ஆயிரம் கிளைகள் இப்போ எங்கே போனது
இந்த சொறிப்படைகள் ?
வேண்டம் இனியும் இந்த உலகமே
எதுவுமே இல்லாது அழிந்து போகட்டும்
மனித இனமே மறைந்து போகட்டும்.